திமுகவால் ஒத்த சீட்டும் இல்லை… எங்களுக்கு மரியாதையும் இல்லை.. கதறும் வேல்முருகன்.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும், எங்களுக்கு சொற்ப இடங்கள் கூட கிடைக்கவில்லை என்று, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மனம் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வேல்முருகன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில்,

“தமிழக உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் கட்சிக்கு போதுமான இடம் திமுக கூட்டணியில் ஒதுக்கப்படவில்லை. தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுக்கு வழங்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் எங்களுக்கு சொற்ப இடங்களே கொடுக்கப்பட்டது.

பட்டம்பாக்கம், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் (OR) பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய பேரூராட்சி, நகராட்சிகளின் துணைத்தலைவர் பதவி வழங்குவதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.

தற்போது அந்த இடங்களை திமுகவினர் கைப்பற்றி விட்டனர். எங்களுக்கு ஒரு பதவி கூட கிடைக்கவில்லை. அதே சமயத்தில் மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவராக தற்போது இருப்பவர்களுக்கு எங்கள் கட்சியை சேர்ந்தவர்களும் வாக்களித்துள்ளார்கள்.

முதல்வரை சந்தித்து நாங்கள் அளித்த வேண்டுகோளுக்கு இதுவரை எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. எனது கட்சியினருக்கு திமுகவினர் மரியாதையை தரவில்லை. திமுகவினர் எங்களை மனதளவில் புண்படுத்தி காயப்படுத்தி உள்ளார்கள். இதை அனைத்தையும் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்” என்று வேல்முருகன் அழாத குறையாக கதறி பேட்டியளித்தார்.