குறைவான நீரில் சிறுதானியங்கள் பயிர் விதைகள் வழங்கல்.!!

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி மற்றும் உச்சிப்புளி வட்டாரங்களில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் நெல் விதைப்பு பணி துவங்கி உள்ளது. நெல் பயிருக்கு சுமார் 1100 மிமீ நீர் தேவைப்படுகிறது. ஆனால் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், குதிரைவாலி போன்ற பயிர்களை சாகுபடி செய்திட சுமார் 300 முதல் 400 மிமீ நீர் போதுமானது. எனவே, விவசாய பெருமக்கள் நடப்பு ஆண்டில் தங்களது நெல் பயிர் பரப்பில் ஒரு பகுதியினை குறைத்து அதில் சிறுதானியங்கள் சாகுபடி செய்திட வேளாண்மைத்துறை மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சிறுதானிய எம்டியு-1 இரக குதிரைவாலி விதைகள் திருப்புல்லாணி மற்றும் திரு உத்திரகோசமங்கை வேளாண்மை விரிவாக்க மையங்களில் விதை கிராம திட்டத்தில் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சிறுதானியம் விதைக்கும் விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் உழவு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் சிறுதானியங்கள் பயிர் செய்த பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது. நடப்பு ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டு என்பதால் சிறுதானிய சாகுபடி முக்கியத்துவம் பெறுகிறது என திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குநர் அமர்லால் தெரிவித்துள்ளார்..