ஊழலை இந்தியாவிலிருந்து அகற்றுவதே முக்கிய பொறுப்பு : சிபிஐ வைர விழாவில் பிரதமர் மோடி பேச்சு..!

புதுடெல்லி: மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு வைரவிழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது.

ஜனநாயகம் மற்றும் நீதிக்கு ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளது. எனவே, ஊழலை இந்தியாவிலிருந்து அகற்றுவதே சிபிஐ-யின் முக்கிய பொறுப்பாக இருக்க வேண்டும். ஊழலை எதிர்த்து போராடுவதில் அரசு மன உறுதியுடன் செயல்படுகிறது. நாட்டு குடிமக்களின் முதல் விருப்பம் ஊழல்வாதிகள் யாரும் தப்பிவிடக்கூடாது என்பதுதான்.

ஊழல் என்பது சிறிய குற்றமல்ல. இது ஏழைகளின் உரிமைகளைப் பறித்து பல குற்றவாளிகள் உருவாவதற்கு வழிவகுக்கிறது. கருப்பு பணம் மற்றும் பினாமி சொத்துகளுக்கு எதிராக அரசு மிக தீவிரமான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. ஊழல்வாதிகள் மட்டுமின்றி, ஊழலுக்கு எதிராகவும் நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்.

திறமையான புலனாய்வு நிறுவனங்கள் இல்லாமல் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவது என்பது சாத்தியமில்லை. எனவே, ஊழலை ஒழிப்பதில் சிபிஐ-க்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது.

சிபிஐ தற்போது தனித் திறன் மிக்க அமைப்பாக உருவெடுத்துள்ளது. எனவேதான் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருக்கும் பல வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. சிபிஐ தனது சிறப்பான மற்றும் நுட்பமான பணித் திறனால் மக்களின் நம்பிக்கைக்குரியதாக மாறியுள்ளது.

பல தசாப்தங்களாக ஊழல்வாதிகள் நாட்டின் செல்வங்களை சூறையாடி செழித்து வந்தனர். ஆனால், தற்போது, ஜன்தன் கணக்குடன் ஆதார், மொபைல் எண் இணைக்கப்பட்டு பயனாளிகளின் முழு உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.