திடீர் திருப்பம்: வங்கிக் கொள்ளை வழக்கு – சிக்கிய அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் சஸ்பெண்ட்!!

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில், அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அரும்பாக்கம் தனியார் நகை கடன் வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளை போனது. இந்த விவகாரத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 28 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நகைகள் குறித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதில் கொள்ளையன் சந்தோஷ் சம்பவம் நடந்த பின்னர் இரண்டு மணி நேரம் பொழிச்சலூர் பகுதியில் சுற்றி வந்தது, அவரது செல்போன்களை ஆய்வு செய்தபோது தெரியவந்தது . இதன் மூலம் அச்சரப்பாக்கம் ஆய்வாளர் அமல்ராஜ் மனைவி மெர்சியும் சந்தோஷ் மனைவி ஜெயந்தியும் உறவினர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அச்சரப்பாக்கம் ஆய்வாளர் மனைவி தனது வீட்டில் மூன்று கிலோ நகைகளை பதுக்கி வைத்திருந்தது இதன்மூலம் தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3.7 கிலோ நகைகளை பறிமுதல் செய்துத்துடன், ஆய்வாளர் அமல்ராஜஜூக்கு கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதையும் கண்டுபிடித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறைக்கு இது குறித்து விசாரிக்க சென்னை காவல்துறை உத்தரவிட்டது. ஆய்வாளர் அமல்ராஜ் மற்றும் அவரது மனைவி மெர்சிக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் எந்த மாதிரியான தொடர்பு உள்ளது என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா அமல்ராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.