கோவை தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் செய்யும் போது பெண் திடீர் மரணம் – போலீசில் புகார்.!!

கோவை சர்க்கார்சாமக்குளம் அருகே உள்ள செம்மாணி செட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மனைவி சகுந்தலா (வயது 54) இவர் துடியலூர் அருகே வடமதுரை உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர் பாலமுருகனிடம் மூக்கில் தசை வளர்ந்து இருப்பதாக கூறி சிகிச்சை பெற்று வந்தார் .நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சகுந்தலாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது திடீரென்று சகுந்தலா இறந்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர் அந்த மருத்துவமனை முன் திரண்டனர் .அவர்கள் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க வேண்டும் என்று மருத்துமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். மேலும் அவர்கள் மருத்துவமனையில் போதிய உபகரணங்கள் இல்லாததாலும் உரிய சிறப்பு டாக்டர்கள் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்ததால் சகுந்தலா இறந்து விட்டதாக துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர் .துடியலூர் இன்ஸ்பெக்டர் மிதுன் குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இறந்த சகுந்தலாவின் உடலை அரசு மருத்துவமனைக்குபிரேத பரிசோதனைக்காக அனுப்புகிறோம்.. நீங்கள் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இது குறித்து போலீசார் கூறும்போது தவறான சிகிச்சையால் சகுந்தலா இறந்திருக்கலாம் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளனர்.பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் என்ன நடந்தது? என்று கூறமுடியும்.அதைத் தொடர்ந்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இது குறித்து தனியார் மருத்துவர் டாக்டர் பாலமுருகன் கூறியதாவது :- சகுந்தலாவுக்குமுறையான பரிசோதனைக்கு பிறகுதான் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது .அந்த நேரத்தில் இதயம் செயல் இழப்பு ஏற்பட்டது .இதை யடுத்து 2 மணி நேரம் போராடியும் இதயத்தை செயல்படுத்த முடியவில்லை. இதனால் தவிர்க்க முடியாமல் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. வேறு எந்த காரணமும் இல்லை என்றார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.