வாரிசு அரசியல், சாதி அரசியல் என்பது பாஜகவில் கிடையாது-கோவையில் ஸ்மிருதி இரானி பேச்சு..!

திர்காலத்தில் தாங்கள் என்னவாக வேண்டும் என்பதை பெண்களே தீர்மானிக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார்.

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் எழுதிய ‘தடையொன்றுமில்லை’ நூல் வெளியிட்டு விழா கோவையில் நேற்று நடந்தது.

இதில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்று நூலை வெளியிட, முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

விழாவில், ஸ்மிருதி இரானி பேசும்போது, ”சிறு கிராமத்தில் பிறந்த வானதி சீனிவாசன் தற்போது பாஜக தேசிய மகளிரணி தலைவராக உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட கமல்ஹாசனை வீழ்த்தி வெற்றி பெற்றார். அதற்கு முன்னரே, தொலைக்காட்சி விவாதத்தில் கமல்ஹாசனை நான் வீழ்த்தியுள்ளேன்.

வானதி சீனிவாசன் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. பெண்கள் கல்வி கற்கும்போதே தொழில்முனைவோர் ஆக வேண்டுமா, இல்லத்தரசியாக இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். தங்கள் எதிர்காலத்தை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். பணத்தை விட சேவை முக்கியமானது.

இந்தியா தற்போது வலிமையாக உள்ளது. பாஜகவில் வாரிசு அரசியல், சாதி அரசியல் கிடையாது. ஆனால், பாஜக குறித்து சிலர் பொய் பிரசாரம் செய்கின்றனர். அதை நீங்கள் முறியடிக்க வேண்டும். கட்சிக்காக உண்மையாக பாடுபடுபவர்களை பாஜக உயர்த்தும்” என்றார். வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பேசும்போது, ”எனது அரசியல் பிரவேசத்துக்கு குடும்பத்தினர் ஒத்துழைத்தனர். இது முழுமையான சுயசரிதை இல்லை. இன்னும் நிறைய பேரைப் பற்றி சொல்ல வேண்டியுள்ளது.

சாதாரண கிராமத்தில் இருக்கும் பெண்மணிக்கு சமுதாயம், குடும்பத்தினர், பெரியவர்கள் உதவி செய்தால் யாராலும் இலக்கை எளிதாக அடைய முடியும். வீட்டில் உள்ள பெண்களும் அரசியலில் சாதிக்க முடியும். பாஜக பல்வேறு வாய்ப்புகளையும், பொறுப்புகளையும் எனக்கு கொடுத்துள்ளது. ஒவ்வொருவரையும் கட்சி தலைமை கூர்ந்து கவனித்து வருகிறது.

பதவி, பொறுப்பு என்பதை தலைக்கு ஏற்றாமல் மக்களுக்கு பணி செய்ய வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி எனக்கு ரோல் மாடல்” என்றார். நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், தொழிலதிபர்கள் டி.ராஜ்குமார், டி.எஸ்.ரமணி சங்கர் ஆகியோர் பேசினர்.