போருக்கு எப்போதும் தயாரா இருங்கணும்… சர்வதேச நாடுகளுக்கு ஜி ஜின்பிங் சொன்ன மெசேஞ்..

பெய்ஜிங்: சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் பேசிய ஜி ஜின்பிங் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு இன்று தொடங்கியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெய்ஜிங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஜி ஜின்பிங் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். சில கருத்துகள் சர்வதேச நாடுகளுக்கு அவர் கொடுக்கும் மெசேஞ்சாகவே பார்க்கப்படுகிறது.

ஜி ஜின்பிங் பேசுகையில், “ஹாங்காங் இப்போது முழுமையாகச் சீனா முழு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. அங்கு இருந்த குழப்பமான நிர்வாகம் இப்போது சீர் செய்யப்பட்டு உள்ளது. தைவான் பிரிவினைவாதத்திற்கு எதிராகப் பெரிய போராட்டத்தை நடத்தியுள்ளோம். பிராந்திய ஒருமைப்பாட்டை எதிர்ப்பவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து இருக்கிறோம். தனியார் பொருளாதாரத்தைச் சீனா ஆதரிக்கும். வள ஒதுக்கீட்டில் சந்தையே தீர்க்கமான பங்கை வகிக்க அனுமதிப்போம். நவீன சோசலிச சக்தியைக் கட்டியெழுப்ப அடுத்த ஐந்து ஆண்டுகள் முக்கியமானதாக இருக்கும்.

வலுவான ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்துடன் ஒரு சோசலிச சித்தாந்தத்தை உருவாக்க வேண்டும்.. சோசலிச சித்தாந்த கருத்தியல் தொடர்ந்து மக்களிடம் எடுத்துச் செல்லப்படும். கடந்த ஐந்து ஆண்டுகளில் ராணுவத்தின் தரத்தைப் பல மடங்கு உயர்த்தி இருக்கிறோம். இப்போது நமக்குச் சர்வதேச தரத்திற்கு இணையான ஒரு ராணுவம் இருக்கிறது. தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கும் ராணுவம் மேலும் மேம்படுத்தப்படும்.

நமது ராணுவம் எப்போதும் போர் தயார்நிலையில் இருக்க வேண்டும். வெற்றி பெறும் திறனையும் நமது ராணுவம் மேம்படுத்தும் இதற்காகப் போர்த் திட்டங்கள் மற்றும் போர் வியூகங்களைச் சிறப்பாக வைத்து இருக்க வேண்டும். உண்மையான போருக்கான ராணுவப் பயிற்சியை தீவிரப்படுத்த வேண்டும். சீனாவின் வளர்ச்சியும் இந்த ஆண்டுகளில் மிகச் சிறப்பாக இருந்து உள்ளது. வரும் காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அதிக தன்னம்பிக்கையை அடையும் முயற்சிகளைச் சீனா துரிதப்படுத்தும்.

ஊழலுக்கு எதிரான போராட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.. எனது ஆட்சியில் ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆட்சியில் மறைந்திருந்த ஆபத்துக்களை அகற்றியுள்ளது. கொரோனாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தாக கூறுகிறார்கள். எங்களுக்குப் பொருளாதாரத்தை விடப் பொதுமக்களின் உயிர் தான் முக்கியம். தைவான் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சீன மக்களின் பொறுப்பு.. தைவான் மீது ராணுவ பலத்தைப் பயன்படுத்தும் உரிமையைச் சீனா ஒருபோதும் கைவிடாது.

சீனா அனைத்து வகையான மேலாதிக்கம் மற்றும் அதிகார அரசியலையும் உறுதியாக எதிர்க்கிறது.. சில நாடுகளிடம் இன்னும் இருக்கும் பனிப்போர் மனநிலையையும் சீனா எதிர்க்கிறது.. உள்நாட்டு விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிடுவதை எதிர்க்கிறது.. அடுத்தாக மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இயற்கை உடன் இணைந்து வாழும் வாழ்க்கையை ஊக்குவிப்போம். காற்று மற்றும் நீர் மாசை குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சீனாவில் உழைக்கும் வயதில் இருக்கும் மக்கள்தொகை பட்டியல் குறைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே புதிய குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து உள்ளது. எனவே, அந்த நிலைமையைச் சரி செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சீக்கிரம் ஒரு பிளானுடன் வருவோம்” என்றார். இந்த மாநாட்டில் ஜி ஜின்பிங் சுமார் 2 மணி நேரம் மிக விரிவாகப் பேசியது குறிப்பிடத்தக்கது.