கோவை மக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள்: 8 மாணவர்கள் உள்பட 40 பேரை கடித்து குதறிய நாய்கள்..!

கோவையில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி தெரிகிறது. இதனால் அங்கு நடை பயிற்சி செல்பவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதே போல பீளமேடு ரொட்டிக் கடை மைதானம் பகுதியில் தெரு நாய்கள் ஏராளமாக சுற்றி திரிகிறது. இவைகள் அந்த பகுதியில் நடந்து செல்பவர்களையும், மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு செல்லும் மாணவர்களையும் கடித்துக் குதறுகிறது. நேற்று மட்டும் அந்த பகுதியில் மொத்தம் 8 பேரை தெருநாய்கள் கடித்துள்ளது.அவர்களுக்கு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:- நேற்று ஒரே நாளில் மட்டும் மாணவர்கள் உள்பட 8 பேரைதெரு நாய்கள் கடித்துள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் பொது மக்களை கடிக்க வாய்ப்பு உள்ளது .மேலும் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் இந்த பகுதியில் 40 பேரை தெருநாய்கள் கடித்து காயப்படுத்தி உள்ளது.இதனால் பொதுமக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.மாநகராட்சி அதிகாரிகள் இதில் உடனே முழு கவனம் செலுத்தி அந்த தெருநாய்களை பிடிக்க வேண்டும்.இல்லாவிடில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இவர் அவர்கள் கூறினார்கள்.