தங்கம் கையிருப்பு பட்டியல் : 9 வது இடத்தில் இந்தியா- அமெரிக்கா முதலிடம்..!

வாஷிங்டன்: தங்கம் கையிருப்பு அதிகம் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.

தற்போதைய நவீன உலகில் காகித நாணயங்கள் புழக்கத்தில் இருந்தாலும் ஒரு நாட்டின் தங்க கையிருப்பே அந்த நாணயத்தின் மதிப்பை நிர்ணயம் செய்கிறது. இதனால் பல்வேறு நாடுகளும் தங்கத்தை சேமித்து வருகின்றன. அந்த வகையில் உலகத்திலேயே அதிகபட்சமாக தங்கம் வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 1,133 மெட்ரிக் டன் அளவுக்கான தங்கத்தை அந்நாடு கையிருப்பில் வைத்துள்ளது. அடுத்ததாக 3,358 மெட்ரிக் டன்னுடன் ஜெர்மனி 2வது இடத்தில் உள்ளது.

கடந்த 2000ம் ஆண்டை காட்டிலும் 3% அளவுக்கு ஜெர்மனியில் தங்கம் கையிருப்பு குறைந்துள்ளது. எந்தவித மாற்றமும் இன்றி 2,451 மெட்ரிக் டன் தங்க கையிருப்புடன் இத்தாலி 3வது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் பிரான்ஸ், ரஷ்யா, சீனா நாடுகள் உள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டிடம் 1,040 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் கையிருப்பு உள்ளது. 8வது இடத்தில் உள்ள ஜப்பானிடம் 845 மெட்ரிக் டன் தங்கம் உள்ளது. 757 மெட்ரிக் டன்னுடன் இந்தியா 9வது இடத்தில் உள்ளது. 2000ம் ஆண்டில் 357 மெட்ரிக் டன் என்ற நிலையில் இருந்து தற்போது 757 மெட்ரிக் டன்னாக சுமார் 112% இந்தியாவில் தங்கம் கையிருப்பு அதிகரித்துள்ளது.

நெதர்லாந்து நாட்டிடம் 612 மெட்ரிக் டன் தங்கம் உள்ளது. தைவான், போர்ச்சுக்கல், இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகள் அடுத்தடுத்து இடங்களில் 500 மெட்ரிக் டன்னுக்கும் குறைவான தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளன.