கோவையில் பெட்டி கடையில் பதுக்கி வைத்து குட்கா,கஞ்சா விற்ற முதியவர் உள்பட 6 பேர் கைது- 25 கிலோ குட்கா பறிமுதல்..!

கோவை துடியலூர் போலீசாருக்கு அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடமான அப்பநாயக்கன்பாளையம் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு ஒரு பெட்டிக்கடையில் குட்காவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பெட்டிக்கடை உரிமையாளர் லோகநாதன் நரேந்திர தேவன் (வயது 27) என்பவரை கைது செய்தனர். அவர் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 25 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். பின்னர் லோகநாதன் நரேந்திர தேவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோன்று மேட்டுப்பாளையம் போலீசார் அந்த பகுதியில் குட்கா விற்பதாக கிடைத்த ரகசிய தகவல்படி சோதனை செய்தனர். அப்போது ஒரு பெட்டிக்கடையில் குட்கா விற்ற செய்யது தாவுத் (60) என்பவரை போலீசார் கைது செய்தனர். காரமடையில் பெட்டிக்கடையில் குட்கா விற்ற மோகனசுந்தரம் என்பவரையும் காரமடை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் மற்றும் போலீசார் சுங்கம் அம்பராம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக 3 வாலிபர்கள் சுற்றி திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். இதில் அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அனைமலையை சேர்ந்த முகமது யூனஸ் (29), தினேஷ்பாபு (22) மற்றும் ரியாஷ் (23) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.