கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதை தமிழ்நாடு அரசு கை விட வேண்டும்- அகில இந்திய மீனவர் சங்கம் வலியுறுத்தல்.!

கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை தமிழ் நாடு அரசு கைவிட வேண்டும் என்று
அகில இந்திய மீனவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது இது குறித்து

அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய செயல் தலைவர் செ.பெரியாண்டி, புதுச்சேரி மாநிலத் தலைவர் ச. தனசேகர், பொதுச் செயலாளர் ஜெ. மூர்த்தி, மற்றும் அமைப்பாளர் ஆ. குமார், ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

மெரினா கடற்கரையில் சிலைகள் வைக்கக் கூடாது என்று பலமுறை நீதிமன்றங்கள் கூறியிருக்கின்றன. காரணம் தொடர்ந்து சிலைகள் வைப்பதை அரசியல் கட்சிகள் பழக்கமாக்கிக் கொண்டால். ஒருகாலத்தில் கடற்கரை முழுக்க நடக்கக் கூட இடமில்லாத அளவு சிலைகள் பெருத்துப் போகும். எதையும் ஒழுங்கு படத்தப் பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் மத்திய அரசு கடற்கரை ஒழுங்குமுறை சட்டம் (CRZ) கொண்டுவந்தது. கடற்கரை பொதுவாக அணுமின் நிலையங்கள், அனல் மின் நிலையங்கள், சுற்றுலாத் தளங்கள், கேளிக்கை விடுதிகள் அமைப்பதற்கு எதுவாக இருக்கிறது.

இதனால் கடற்கரையை ஆக்கிரமிக்கும் முயற்சி அரசும், தனியார் தொழிற் விற்பன்னர்களும், பன்னாட்டு நிறுவனங்களும் தொடர்ந்து செய்து வருகின்றனர். இவைகள் பெருத்த லாபம் கொழிக்கும் தொழிலாகவும் இருப்பதால் எப்படியாவது அனுமதியும் பெற்று விடுகின்றனர். இப்படி பெருகிவரும் தொழிற்சாலைகள் சுற்றுலாத் தளங்களால். கடலும் கடற்கரையும் ஆக்கிரமிப்பு செய்யப் படுகின்றன.

கடலில் இன்று அமைக்கப் படும் நினைவு சின்னம் நாளைய சுற்றுலாத் தளம் தானே. நியாயமாக கடலில் நினைவுச் சின்னங்கள் அமைக்க வேண்டும் என்று சொல்வது அரசுத் துறைகள் அத்தனைக்கும் தெரியும், கடற்கரை ஒழுங்கு முறை சட்டத்திற்கு எதிரானது என்று. அதற்கு எடுத்த எடுப்பிலே அனுமதி மறுக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அது கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு ஏன் வருகிறது, எப்படியாவது சட்டத்தை வளைத்து விடுவது என்பது தானே நோக்கம். மீனவர்கள் அரும்பாடு பட்டு வாங்கிய சட்டம் கடற்கரை ஒழுங்கு முறை சட்டம். அதனை மீனவர்களை வைத்தே உடைக்கும் முயற்சியில் எப்போதும் ஆட்சியாளர்கள் ஈடுபடுகின்றனர்.

ஒவ்வொரு ஆட்சியிலும் இதுபோன்று அதிகாரத்தை பயன்படுத்தி கடலையும் கடற்கரையையும் கபளீகரம் செய்தால் மீன் பிடித்தல் என்ற தொழிலும், மீனவர்கள் என்ற குலமும் இல்லாமல் போகும். எப்படி விவசாயம் என்ற தொழிலும், விவசாயிகளும் இல்லாமல் போனால், எப்படி மானுடம் வாழ முடியாதோ, எப்படி காடு மலை ஆறு என்ற இயற்கை வளங்கள் இல்லாமல் போனால் இந்த பூமியில் எப்படி மனிதர்கள் வாழமுடியாதோ, அதைப்போல கடலும், கடல் வளமும், மீனவனும் இல்லாமல் போனால் மண்ணில் மனிதர்கள் யாரும் வாழ முடியாது என்பதை அனைவரும் உணரவேண்டும். பொதுவாக மீனவர்கள் நட்புக்கு மிகுந்த மரியாதை கொடுக்கும் பண்பாளர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்களை வைத்தே சட்டத்தை மீறி கடலில் நினைவு சின்னம் வைக்கும் திட்டத்தை கைவிடும் படி தமிழக அரசை அகில இந்திய மீனவர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இது போன்று எதிர்காலத்திலும் எந்த வித கட்டுமானப் பணிகளும் “கடற்கரை ஒழுங்கு முறை சட்டத்தை” மீறி கடலிலும் கடற்கரையிலும் நடைபெறா வண்ணம் தேவையான தடுப்பு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது