அமலாக்கத்துறை இழுத்து சென்று தாக்கியதாக செந்தில்பாலாஜி கூறினார்- மனித உரிமை ஆணைய உறுப்பினர் பரபரப்பு தகவல்.!

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் செய்தியாளர்களிடம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே அமலாக்கத் துறை சோதனையின் போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்படவே அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு இதய நாளங்களில் அடைப்பு இருப்பதால் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்த போது மனித உரிமை மீறல்கள் நடந்ததாகச் செய்திகள் வெளியாகின.

இந்தச் சூழலில், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது, அப்போது மனித உரிமை மீறல்கள் நடந்ததாக வெளியான தகவல் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பாகச் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்க வந்துள்ளதாகத் தெரிவித்தார். செந்தில் பாலாஜிக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவரே கூறினார் என்றும் அமலாக்கத் துறையினர் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதாகச் செந்தில் பாலாஜி கூறினார் என்றும் கண்ணதாசன் தெரிவித்தார்.

கைது செய்த போது தன்னை தரதரவென இழுத்துச் சென்றதாகவும் அப்போது தலையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறினார் என்றும் கண்ணதாசன் தெரிவித்தார். மேலும், தன்னை தாக்கிய அதிகாரிகள் பெயரையும் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார் என்று கண்ணதாசன் கூறினார்.

மாநில மனித உரிமை ஆணையத்திற்குத் தானாகச் சென்று விசாரணை நடத்த உரிமை உள்ளது என்றும் கண்ணதாசன் தெரிவித்தார்.