செந்தில் பாலாஜி விவகாரம்: ஆளுநருக்கு எப்படி உத்தரவிட முடியும்..? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி..?

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்ட நிலையில் அடுத்த சில மணிநேரத்தில் அதனை நிறுத்தி வைத்தார்.

இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஆளுநருக்கு எப்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியும்? என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கேள்வி எழுப்பியது.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அவரை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தற்போது அவர் நீதிமன்ற கவாலில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே செந்தில் பாலாஜி நிர்வகித்த மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளார். மேலும் செந்தில் பாலாஜியை துறைகள் இல்லாத அமைச்சராக இருக்கவும் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்என் ரவிக்கு பரிந்துரைத்தார். ஆனால் ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்கவில்லை.

இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிட்டார். இது கடந்த 16ம் தேதி நடந்தது. இதையடுத்து கடந்த மாதம் 29ம் தேதி ஆளுநர் ஆர்என் ரவி இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில் தமிழக அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜியை நீக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து அவர் தனது உத்தரவை நிறுத்தி வைப்பதாக கூறினார். இதனால் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்கிறார். மேலும் மத்திய அரசு, அட்டர்னி ஜெனரல் உள்ளிட்டவர்களின் ஆலோசனைக்கு பிறகு இந்த விஷயத்தில் ஆளுநர் ஆர்என் ரவி நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்எல் ரவி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்திவைத்த தமிழக ஆளுநர் ரவியின் கடிதத்தை ரத்து செய்ய வேண்டும். அரசியல் சாசனத்தின்படி ஆளுநர் எடுத்த முடிவை, மறுபரிசீனை செய்ய முடியாது.ஆளுநர் முடிவு எடுத்த பிறகு வேறு யாருடனும் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை” என தெரிவித்து இருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி எதனடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என்பது குறித்த 2 மனுக்களும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின்போது எம்எல் ரவி மனு தொடர்பாக உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பியது.

அதாவது அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய பிறகு அந்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு எப்படி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும். மேலும் ஆளுநருக்கு உத்தரவிட முடியும் எனக்கூறும் தீர்ப்பு விபரத்தை மனுதாரர் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இந்த மனுதாரர்கள் அனைவரும் வழக்கு தொடர்பாக மேற்கொள் காட்ட வேண்டிய தீர்ப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார்.