செல்போனில் பெண்களின் போட்டோவை அனுப்பி அடுக்கு மாடி குடியிருப்பில் அழகிகள் இருப்பதாக கூறி வாலிபர்களிடம் பணம் மோசடி..!!!

கோவை சவுரிபாளையத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு செயல்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பில் சூப்பர்வைசராக ராஜேந்திரன் (வயது 84) என்பவர் உள்ளார்.
சம்பவத்தன்று இந்த குடியிருப்பிற்கு சில வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அங்கு இருந்த காவலாளியிடம் தங்களது செல்போனில் உள்ள சில பெண்களின் போட்டோவை காட்டினர். பின்னர் அவர்கள் தங்கி இருக்கும் குடியிருப்பை காட்டுங்கள் என கூறியுள்ளனர்.
அதனை பார்த்த காவலாளி இவர்கள் யாரும் இங்கு தங்கவில்லை என கூறினார். அந்த வாலிபர்கள் எங்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் புகைப்படத்தை அனுப்பிய பெண், தான் இங்கே தங்கி இருப்பதாகவும், ஆன்லைன் மூலமாக பணம் அனுப்பினால் ஜாலியாக உல்லாசம் அனுபவிக்கலாம் என கூறினார். அதனை நம்பி நாங்கள் பணத்தை அனுப்பி வைத்தோம். அதன் பின்னர் இங்கு வந்து அந்த பெண்ணிடம் ஜாலியாக இருப்பதற்காக வந்தோம் என்றனர். இதுகுறித்து காவலாளி, சூப்பர்வைசர் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் இது குறித்து பீளமேடு போலீசில் எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக சில போலியான முகவரியை கொடுத்து வாலிபர்களிடம் பணத்தை பெற்று ஏமாற்றி உள்ளனர். எனவே எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் தவறான முறையில் சித்தரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.