வன்னியர் இட ஒதுக்கீடு: உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.!!

புதுடில்லி : வன்னியர் சமூகத்தினருக்கு, 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் பிரச்னை தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், வன்னியர் சமூகத்தினருக்கு, 10.5 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, வன்னியர் இடஒதுக்கீடுக்கு தடை விதித்து தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் பா.ம.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த டிச., 14ல் விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது.அதே நேரத்தில், ‘உள்ஒதுக்கீட்டில் ஏற்கனவே பணியமர்த்தப்பட்டவர்கள், கல்லுாரிகளில் சேர்ந்தவர்களை நீக்க கூடாது; பிப்ரவரி 15 வரை புதிய மாணவர் சேர்க்கை நடைபெறக்கூடாது; புதிதாக பணியமர்த்தக் கூடாது’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஆதரவு தெரிவித்தனர்.இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு முன் நேற்று நடந்தது.அப்போது நீதிபதிகள் கூறியதாவது: வழக்கறிஞர்கள் தெரிவித்த பல்வேறு தீர்ப்புகளை ஆய்வு செய்தோம். இந்த வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என முடிவுக்கு வந்துள்ளோம். அதனால், உள்ஒதுக்கீடு வழக்கு மீதான விவாதங்களை, வழக்கறிஞர்கள் தொடரலாம்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.இதன்பின், விசாரணை 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.