பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்.!!

சென்னை: தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு, புதுவை உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்றது. மாலை 6 மணி முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஸ்ட்ராங் ரூம் எனப்படும் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த கட்டுப்பாட்டு அறைகள் எப்படி இருக்கும்.. தேர்தல் ஆணைய விதிகளின் படி கட்டுப்பாட்டு அறையில் என்ன மாதிரியான பாதுகாப்பு இருக்கும் என்பது பற்றிய முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்..

ஒவ்வொரு லோக்சபா தொகுதிகளிலும் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். கட்டுப்பாட்டு அறையை பொருத்தவரை ஒரு கதவு மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும். முழுமையாக் கண்காணிக்கும் வகையில் அந்த அறை அமைந்து இருக்க வேண்டும். கட்டுப்பாட்டு அறையை திறக்க இரண்டு சாவிகள் தேவைப்படும் வகையில் லாக் அமைக்கப்படும்.

ஒரு சாவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருக்கும். மற்றொரு சாவி மாவட்ட அளவிலான தேர்தல் அதிகாரியிடம் இருக்கும். இந்த இரண்டு சாவிகளையும் கொண்டு திறந்தால்தான் கட்டுப்பாட்டு அறையை திறக்க முடியும். தீ, வெள்ளம் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு இருக்க வேண்டும். 24 மணி நேரமும் மத்திய பாதுகாப்பு படைகள் கண்காணிப்பு போடப்படும்

கட்டுப்பாட்டு அறையை பொறுத்தவரை மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். முதல் அடுக்கில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். இரண்டாவது அடுக்கில் தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். கட்டுப்பாட்டு அறையில் இருந்து 50 மீட்டரில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இவர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

மூன்றாவது அடுக்கில் மாவட்ட நிர்வாகத்தின் காவல் பிரிவு பாதுகாப்பு பணியில் இருக்கும். இவர்கள் அனுமதி இல்லாமல் கட்டுப்பாட்டு அறை இருக்கும் இடத்திற்கு செல்லவே முடியாது. சிசிடிவி கேமரா மூலமாக 24 மணி நேரமும் ஸ்ட்ராங் ரூம் கண்காணிக்கப்படும். அதன் அருகிலேயே கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டு இருப்பார்கள்.

மின்சாரம் தடையில்லாமல் இருக்க வேண்டும். வேட்பாளர்கள், முகவர்கள் யாராவது ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பாக இருக்கிறதா? என்று பார்க்க விரும்பினால் அவர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கப்படும். பாதுகாப்பு படையிடம் இதை காட்டி அவர்கள்  ரூம் பாதுகாப்பை சென்று பார்த்துக்கொள்ளலாம்.