சபரிமலை அய்யப்பன் கோயில் நடை வரும் 14 ஆம் தேதி திறப்பு-பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் .!!

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் எண்ணிலடங்கா பக்தர்கள் மாலை அணிந்து இருமுடியும் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை வருகிற 14 ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனிடையே, பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை வியாழக்கிழமை பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெறும். இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது. தரிசனத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வருமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.