இதுவரையிலும் மன்னிப்பு கேட்காத அமைச்சர்… நிருபர்கள் அடங்கிப்போவது ஏன்..?-பாஜகவினர் கேள்வி..?

அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை அவன் இவன் என்று ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைச்சர் எ.வ. வேலூ தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் தலைமையேற்று பேசிய எ.வ.வேலு செய்தியாளர்களை அவன் இவன் என்று ஒருமையில் பேசும் வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று இருந்தபோது செய்தியாளர்களை ஒருமையில் பேசிய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் அமைச்சர் இதுவரையிலும் மன்னிப்பு கேட்கவில்லை என்கிறார்கள் பத்திரிகையாளர்கள். அப்படி இருந்தும் அமைச்சருக்கு எதிராக பத்திரிகையாளர்கள் யாரும் குரல் கொடுக்காமல் இருக்கிறார்கள் என்கிறனர் பாஜகவினர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் குறித்து பேசியபோது பத்திரிகையாளர்கள் பலரும் போராட்டத்தில் குதித்தார்கள். ஆனால் அமைச்சரின் பேச்சுக்கு பத்திரிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் அடங்கிப் போவது ஏன் என்று பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.