சீர்காழியில் 82 யாக குண்டங்கள்.. 5000 பரதக் கலைஞர்கள்.. 32 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேகம்!!

சைவ மடங்களுள் ஒன்றாக மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் அருளாட்சியில் 27 திருக்கோயில்கள் உள்ளன.

அதில் தருமையாதீனத்தைச் சுற்றி நான்கு திசைக்கும் அருள் புரிகின்ற பெரும் தெய்வங்களாக மேற்கே சரபமூர்த்தியும், வடக்கே சட்டைநாதரும், கிழக்கே கால சம்ஹார மூர்த்தியும், தெற்கே வீரபத்திரரும் அரணாகத் திகழ்கின்றார்கள் என்பது வரலாறு. அதில், திருஞானசம்பந்தர் அவதாரத் தலமான சீர்காழியில் அமைந்திருக்கும் ஸ்ரீ சட்டை நாத சுவாமி திருக்கோயில் பிரசித்தி பெற்றது.

சோழர்களால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோயில் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தேவாரத்தலம். இங்கு, சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூன்று வயதுக் குழந்தையாகத் தனியாகப் பசியால் அழுதுகொண்டிருந்த திருஞானசம்பந்தருக்கு அம்பிகை ஞானப்பால் ஊட்டினார் என்கிறது தலவரலாறு. அதன்பலனாகப் பதிகம் பாடும் வல்லமைபெற்ற திருஞானசம்பந்தர் ‘தோடுடைய செவியேன்’ என்று ஈசனைப் போற்றிப்பாடினார். இந்த அற்புதம் நிகழந்த திருத்தலம் சீர்காழி சட்டைநாதர் திருக்கோயில் இங்கு அம்பாள் திருநிலைநாயகியாகவும், சுவாமி ஸ்ரீ பிரம்மபுரிசுவரராகவும் அருள் பாலிக்கின்றனர்.

சிறப்பு பெற்ற இந்த ஆலயம் கடந்த 32 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் செய்யப்படாமல் இருந்த நிலையில், தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் உத்தரவின் பேரில் கும்பாபிஷேகம் செய்யத் திட்டமிட்டுத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் புதிய கட்டளை மடம் கட்டப்பட்டு, ஸ்ரீ சட்டநாத சுவாமி தேவஸ்தானத்தின் உபகோயில்கள் அனைத்திற்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பெரியக்கோயிலில் பிராகாரங்கள் அனைத்தும் பழுதுபார்த்துப் பல இடங்களில் புதியதாகக் கருங்கல் தளவரிசை, சுவாமி கொடிமர மண்டபம், வசந்த மண்டபம், உக்கிராணம், மடைப்பள்ளி, சுவாமி கோயில் இரண்டடுக்குத் திருமாளிகைப்பத்தி, கருங்கல் சுற்றுமதில், சுவாமி. அம்பாள், சம்பந்தர் கருங்கல் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், நாத மண்டபம் ஆகியவை சரி செய்யப்பட்டுக் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, மடாதிபதிகள், நீதி அரசர்கள், ஆளுநர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலருக்கும் தருமை ஆதீனம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஸ்ரீ சட்டைநாத சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம்

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 16-ம் தேதி கோவிலின் தென்மேற்கு பகுதியில் சீரமைப்பு பணியின் போது பூமிக்கடியில் இருந்து 22 பஞ்ச லோக சிலைகளும், 500 க்கும் மேற்பட்ட தேவாரச் செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டது. கடந்த மே 16 ம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கி, 20-ம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன.

இரண்டாம் கால, மூன்றாம் கால யாகசாலை பூஜைகளில் நீதி அரசர்கள் பலர் கலந்து கொண்ட நிலையில், மே 23-ம் தேதி நடைபெற்ற ஏழாம் கால யாகசாலை பூஜையில் தருமை ஆதீன நட்சத்திர குருமணிகளுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றார்.

அதையடுத்து, மே 24-ம் தேதியாகிய இன்று காலை எட்டாம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று ஜபம், ஹோமம், தத்வார்ச்சனை முடிந்தபின் காலை 9.30 மணி அளவில் விமான ராஜ கோபுர மஹா கும்பாபிஷேகமும், 10 மணி அளவில் மூலஸ்தான மூர்த்திகள் கும்பாபிஷேகமும் நடைபெற்றன. தொடர்ந்து மாலை ஸ்ரீ சட்டைநாதருக்கு சொர்ணாபிஷேகமும், ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானத்திற்கு கனகாபிஷேகமும் நடைபெறும். இரவு திருக்கல்யாணமும், வீதியுலா நிகழ்வு நடைபெற உள்ளன.

கயிலாய மலையைப் போல யாகசாலை நுழைவு வாயில் அமைத்து, எட்டுக் கால யாகசாலை பூஜைகள் செய்து, 82 யாக குண்டங்கள் அமைக்கப்பெற்று 120 சாதக போதக சிவாசார்யர்கள் வேத மந்திரம் முழங்கினர். ஓதுவாமூர்த்திகள், தேவாரப் பாடசாலை மாணவர்கள், திருமுறை பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அடியார் பெருமக்கள் 1,000 பேர் சேர்ந்து முற்றோதல் செய்ய, நூற்றுக்கும் மேற்பட்ட செந்தமிழ் புலவர்கள் பங்கேற்றுச் சமயச் சொற்பொழிவாற்ற., நூற்றுக்கும் மேற்பட்ட மங்கல இசைக் கலைஞர்கள் பங்கேற்று, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். 5,000 க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள், மாணவர்கள் பங்கேற்று நாட்டியாஞ்சலி நிகழ்த்தினர். கும்பாபிஷேகத்தை ஒட்டி சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் கோயில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுக் கோலாகலமாகத் திகழ்கிறது.

மேற்கண்ட கும்பாபிஷேக நிகழ்வில், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சைவ மடங்களில் இருந்து மடாதிபதிகள், ஆதீனங்கள், புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழசை சௌந்தரராஜன், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர். ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டு கும்பாபிஷேகம் நிறைவடைந்தது.