சீனாவா வேண்டாம்… பண வீக்கம் ஏற்பட வாய்ப்பு- உலக நாடுகளுக்கு வந்த புதிய பிரச்சனை..!

மெரிக்காவிற்கு அடுத்த பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனா குறைந்த காலகட்டத்தில் வேகமாக வளர்ச்சி அடைய முக்கியக் காரணமாக இருந்தது உற்பத்தித் துறை தான்.

தற்போது இதே உற்பத்தித் துறைக்குத் தான் பல பிரச்சனைகள் வந்துள்ளன, குறிப்பாக அமெரிக்கா – சீனா வர்த்தகப் போருக்கு பின்பும், சீனா – தைவான் பிரச்சனைக்கு பின்பும் சீனா-வை இனியும் நம்பியிருக்கக் கூடாது என்ற உறுதியான முடிவைப் பல நாடுகள் எடுத்துள்ளது.

இதனால் சீனா-வின் பொருளாதார அடிப்படையே ஆட்டம் காணும் அளவிற்குத் தற்போது தள்ளப்பட்டு உள்ளது.

உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் மலிவான விலையில் உற்பத்தி செய்யக் கடந்த 10 – 15 வருடத்தில் சீனாவில் சிறிதும் பெரிதுமாக உற்பத்தி தளத்தை அமைத்து வந்தது. ஆனால் தற்போது இதைச் சீனாவில் இருந்து வேறு நாடுகளுக்கு மாற்ற பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் முடிவெடுத்து வருகின்றன.

இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது தைவான் பிரச்சனை. ஏற்கனவே சீனா – அமெரிக்காவிற்கும் வர்த்தகப் போர் வெடித்த போது பல 100 நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலையை இந்தியா உட்படப் பிற தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மாற்றின.

இந்நிலையில் தற்போது தைவான் சுதந்திர நாடாக இருக்க அமெரிக்கா நேரடியாக ஆதரவு அளிக்கிறது. இதேவேளையில் தான் சீனா சர்வதேச பொருளாதாரத்திலும், விற்பனை மற்றும் உற்பத்தி சந்தையில் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தி வருகிறது, ஒரு நாட்டை மட்டும் நம்பி இயங்கக் கூடாது என்ற கருத்து வல்லரசு நாடுகள் மத்தியில் மட்டும் அல்லாமல் வளரும் நாடுகள் மத்தியிலும் அதிகமாக எதிரொலிக்கிறது.

இதேவேளையில் சீனாவின் கடன் வலை பிரச்சனை பல நாடுகளுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. இவை அனைத்தும் தான் தற்போது உலகின் பல நாடுகளைச் சீனாவில் இருந்து உற்பத்தி தளத்தைப் பிற நாடுகளுக்கு மாற்றத் திட்டமிட்டு வருகிறது.

ஆனால் இன்னொரு சீனா-வை உருவாக்குவது என்பது சாதாரணக் காரியம் இல்லை, அதுவரையில் உலக நாடுகள் அதிகப்படியான விலைவாசியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கும். ஏற்கனவே பணவீக்கத்தின் காரணமாக உலக நாடுகள் அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.