மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.759 கோடியில் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

றைமலைநகர்: திமுக ஆட்சி அமைந்த 15 மாதங்களில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக ரூ.759 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் நிறைவேற்றித் தரப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 4-வது தமிழ் மாநில மாநாடு நேற்று தொடங்கி நாளை வரை செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவிலில் நடந்து வருகிறது. இதில் நேற்று மறைமலைநகரில் நடந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மாற்றுத் திறனாளிகள் என்று சுயமரியாதைப் பெயரைச் சூட்டியவர் நம்முடைய கருணாநிதிதான். கரோனா காலத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுக்கே சென்றும் தடுப்பூசி வழங்கப்பட்டது. இதில், 3 லட்சத்து 84 ஆயிரத்து 114 பேர் இத்திட்டத்தில் பயன்பெற்றிருக்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கென 2022-23 நிதியாண்டில் ரூ.838 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் மாதம் ரூ.1500 வழங்க உத்தரவிட்டோம். கடுமையான இயலாமை – கடுமையான அறிவுசார்குறைபாடு – தசைச்சிதைவு மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்டு வந்த பராமரிப்பு உதவித்தொகை 1,500 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சாலை ஓரங்களில் தள்ளுவண்டிக் கடை நடத்த நகர விற்பனைக் குழுவின் விதிமுறைப்படி முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் 4 விழுக்காடு இடஒதுக்கீட்டினை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க ஏதுவாக உயர்மட்டக் குழு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. கிராமங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகள் வழங்க தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை தரப்படும். இவை எல்லாம் பதினைந்தே மாதத்தில் செய்யப்பட்டிருக்கக் கூடிய நலத்திட்டங்கள். இவர்களுக்காக மட்டும் கடந்த பதினைந்து மாதங்களில் 759 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் நிறைவேற்றித் தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிபிஐஎம் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன், சங்கத்தின் மாநில தலைவர் பா.ஜான்சிராணி, அகில இந்திய பொதுச் செயலாளர் வி. முரளிதரன், மாநில செயலாளர் எஸ்.நம்புராஜன், பொருளாளர் கே.ஆர்.சக்ரவர்த்தி பங்கேற்றனர்.