எதிர்க்கட்சிகள் மீதான சிபிஐ, அமலாக்கத்துறை ரெய்டுகளுக்கு பிரதமர் மோடி காரணமில்லை – அந்தர் பல்டி அடித்த மம்தா பானர்ஜி..!!

மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது.2011ஆம் ஆண்டு கம்யூனிஸ்டுகளின் ஆட்சியை வீழ்த்தி முதல் முறையாக முதலமைச்சரான மம்தா, அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல் அனைத்திலும் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் கடுமையான சவாலையும் மீறி தனிப் பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றி பெற்றார். ஆனால் சட்டப்பேரவைத் தேர்தல் காலத்தில் இருந்தே,திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய அரசு அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றின் நடவடிக்கைகள் தீவிரமாக உள்ளன. எதிர்க்கட்சிகளின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் பிரதமர் மோடி மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு அமைப்புகளை ஏவி விடுகிறார் என மம்தா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மத்திய அமைப்புகள் மோடி, அமித் ஷாவின் கைப்பாவையாக திகழ்வதாக பகிரங்க குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அமைப்புகளின் வரம்பு மீறிய நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கு வங்க சட்டப் பேரவையில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தீர்மானம் கொண்டு வந்து அதை நிறைவேற்றியுள்ளார். இந்த தீர்மானம் குறித்து பேசும் போது மம்தா பேசிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்மானம் குறித்து கூறிய அவர், “தற்போதைய மத்திய அரசு சர்வாதிகார போக்கில் செயல்படுகிறது. இந்த தீர்மானம் தனிப்பட்ட நபர்கள் யாருக்கு எதிரானது அல்ல. மத்திய அமைப்புகள் பாரபட்சத்துடன் செயல்படுவதை உணர்த்தவே இந்த தீர்மானம். பிரதமர் மோடி தான் மத்திய அமைப்புகளை துஷ்பிரயோகம் செய்து மாநில அரசுக்கு எதிராக ஏவிவிடுகிறார் என நான் நம்பவில்லை.

பாஜகவின் ஒரு சில தலைவர்கள் தான் தங்கள் சுயநலத்திற்காக இதன் பின்னணியில் இருப்பார்கள் என நினைக்கிறேன்.சிபிஐ அமைப்பு பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கைகளை முறையாக தாக்கல் செய்வதில்லை. இந்த விஷயம் பலருக்கு தெரியாது. இந்த அமைப்புகளின் செயல்பாட்டால் தொழிலதிபர்கள் நாட்டைவிட்டு ஓடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது” என்று பேசினார்.

சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் நேரடியாக சாடி வரும் நிலையில், மம்தாவின் இந்த திடீர் மாற்று கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.