திமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓய்வு பெற்றார் சுப்புலட்சுமி ஜெகதீசன்..!

தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “2009-ல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றதற்குப் பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் கட்சிப் பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கலைஞர் அவர்களிடமே தெரிவித்துவிட்டேன். தலைவர் கலைஞர் மறைவுக்குப் பின், அவரின் விருப்பத்தின்படி தளபதி அவர்களை முதலமைச்சராக்கும் நோக்கத்துடன் கழகப் பணிகளை மட்டும் செய்து வந்தேன்.

2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று, தலைவர் தளபதி முதலமைச்சராக பொறுப்பேற்று, அரசு பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி அன்று பதவியில் இருந்தும் கட்சியிலிருந்து விலகுவதாக, எனது விலகல் கடிதத்தை, தலைவர் தளபதி அவர்களுக்கு அனுப்பி விட்டேன்,” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

1977-ம் ஆண்டு அ.தி.மு.க-வில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சுப்புலட்சுமி ஜெகதீசன் பின்னர் தி.மு.க-வில் சேர்ந்து 1989-ம் ஆண்டு ஈரோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். மேலும், அப்போதே மாநில சமூகத்துறை அமைச்சர் பொறுப்பும் வகித்தார். தொடர்ந்து நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இருந்தவர் 2009-ல் பணிக்காலம் முடிந்து 2021 சட்ட மன்ற தேர்தலில் ஈரோடு மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில், பா.ஜ.க வேட்பாளரான சி.ஆர்.சரஸ்வதியிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடதக்கது.