மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அமைச்சர் ஸ்மிருதி இரானி, கொரோனா பெருந்தொற்று பாதிப்பால், பெற்றோர், தத்தெடுத்த பெற்றோர் அல்லது சட்டப்பூர்வமான பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கப்பட்டு வருவதாக இதுபோன்ற குழந்தைகள் தன்னிறைவு பெறும் வகையில், அவர்கள் 23 வயதை எட்டும் வரை சுகாதார காப்பீடு மற்றும் கல்வி உதவிகள் வாயிலாக உதவியளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்தின்கீழ், சேர்க்கப்படும் குழந்தைகள் 18 வயதை அடையும் போது, அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் பெறும் வகையில் நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டு, பணம் செலுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த 10 லட்சம் ரூபாயை அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் 18 வயது முதல் 23 வயது வரை மாதாந்திர உதவித் தொகையை பெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார். உறவினர்களுடன் தங்கியுள்ள குழந்தைகளுக்கு வாத்ஸல்யா திட்டத்தின்கீழ், மாதந்தோறும் ரூ.4,000 வழங்கப்படுவதுடன், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் தனியார் பள்ளிகளில் இந்தக் குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுவதுடன், ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு ரூ. 20,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, பிரதமரின் ஜன் ஆரோக்கியா காப்பீடு திட்டத்தின்கீழ், 23 வயது வரை சுகாதார காப்பீட்டு வசதி வழங்கப்படுவதாகவும் கூறினார்.
Leave a Reply