காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு இன்று விருந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த 8 ஆம் தேதி முடிவடைந்தது.

இதன் நிறைவு விழாவில் இந்திய அணிக்கு 4 பதக்கம் வென்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியேந்தி அணிவகுத்து சென்றனர். 12 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா சார்பில் 210 வீரர், வீராங்கனைகள் களம் இறங்கினர்.

இந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என்று மொத்தம் 61 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. இந்த நிலையில் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று விருந்தளிக்க உள்ளார்.

பிரதமர் மோடி இன்று காலை 11:00 மணிக்கு பதக்கம் வென்ற வீரர்களை சந்திக்கிறார். குறிப்பாக காமன்வெல்த் குத்துச்சண்டையில் பதக்கம் வென்றவுடன் பேட்டியளித்த இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் பிரதமர் மோடியை சந்திக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் தனது குத்துச்சண்டை கையுறையில் பிரதமரிடம் “ஆட்டோகிராப்” வாங்குவேன் என்றும் அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.