போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் பதவி உயர்வுக்காக வசூல்.. ரூ.35 லட்சம் பறிமுதல்- லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி.!!

சென்னை சேப்பாக்கத்திலுள்ள போக்குவரத்துத்துறை அலுவலகத்தில், நிர்வாகப் பிரிவு துணை கமிஷனராக நடராஜன் என்பவர் பணிபுரிந்துவருகிறார்.

இவர், அந்த அலுவலகத்தில் உதவியாளர் நிலையில் பணிபுரியும் ஊழியர்களிடம் ரகசியக் கூட்டம் நடத்தி, கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு அடையவேண்டுமெனில் ரூ.5 லட்சம் தர வேண்டும் எனப் பேசியதாகத் தகவல் வெளியானது. இதேபோல் மாநிலத்தின் வேறு இடங்களில் பணிபுரியும் போக்குவரத்துத்துறை கண்காணிப்பாளர்களிடம், `நீங்கள் அதே இடத்தில் பணிபுரிய வேண்டுமெனில், ரூ. 5 லட்சம் தர வேண்டும். இல்லையெனில், உங்களின் இருப்பிடத்துக்கும், பணியிடத்துக்கும் சம்பந்தமே இல்லாத இடத்துக்கு மாற்றிவிடுவேன்’ என அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ரகசியத் தகவல் கிடைத்ததால் லஞ்ச ஒழிப்புத்துறையினர், நேற்று மாலை 3 மணியளவில், சென்னை சேப்பாக்கத்திலுள்ள போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் நுழைந்து அதிரடியாகச் சோதனை நடத்தியுள்ளனர்.

இதில் அந்த அலுவலகத்தில் கணக்கில் வராத பணமாக ரூ. 35 லட்சம் இருந்ததை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் நடராஜனிடம் விசாரணை நடத்தியதில், போக்குவரத்துத்துறை இணையதளத்தில் விவரங்களைப் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பணிகளை நடராஜன் கவனித்துவந்தது தெரியவந்துள்ளது. மேலும், பதவி உயர்வு வழங்கும் அளவுக்கு நடராஜனுக்கு இந்த விஷயத்தில் சம்பந்தமில்லை. இருப்பினும், நடராஜன் தன் உயரதிகாரிகளுக்கு லஞ்சம் வசூலித்ததாக அங்கு கூறப்பட்டு வருகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையினரின் இந்த விசாரணை இரவு 10 மணிக்கு மேலும் தொடர்ந்து நடைபெற்றது. விசாரணை குறித்த முழுமையான தகவல் ஏதும் வெளிவரவில்லை.