கோவை: கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கோவையில் 41 இடங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 58 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.தொடர்ந்து கோவை விளாங்குறிச்சியில் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜெயராம் வீடு உள்ளது. இவரது வீட்டிலும் இன்று காலை முதல் சோதனை நடந்து வருகிறது. அருகேயுள்ள இவரது குடோனிலும் சோதனை நடந்து வருகிறது.
எட்டிமடையில் உள்ள கிணத்துக்கடவு தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சண்முகம் வீடு, முத்துக் கவுண்டன் புதூரில் உள்ள அதிமுக நிர்வாகியும், முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் வி.பி.கந்தவேல், பீளமேடு பாரதிகாலனி சாலையில் உள்ள பெண் கூடுதல் எஸ்.பி. அனிதா வீடு ,அன்னூரில் உள்ள பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீடு, லட்சுமி மில் அருகே உள்ள தனியார் கல்லூரி அலுவலகம் ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை குறித்து தகவல் அறிந்தவுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் அம்மன் அர்ஜுனன், அமுல் கந்தசாமி ஆகியோர் இன்று காலை வேலுமணி வீட்டுக்கு வந்தனர். அவர்கள் உள்ளே செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போலீஸார் அவர்களை தடுத்து அனுமதிக்க மறுத்தனர்.இதனால் அங்கிருந்த அதிமுகவினர் கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து அவர்களை போலீஸார் உள்ளே அனுமதித்தனர். சோதனை நடந்த சமயத்தில் அதிமுக எம்.எல்.ஏக்களை விதிகளை மீறி சோதனை நடக்கும் இடத்தில் அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Leave a Reply