கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த பெண்ணிடம் டேட்டிங் ஆப் மூலம் பேசி பணம் பறித்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞனை போலிஸார் கைது செய்திருக்கிறார்கள்.
நைஜீரியாவைச் சேர்ந்த எனுகா அரின்சி எபெனா (36) என்ற இளைஞன் ஆலப்புழாவைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் டேட்டிங் ஆப் மூலம் பழகி வந்திருக்கிறார். அதன் மூலம் ஆசையாக பேசி பெண்ணின் குடும்பம் தொடர்பான அனைத்து விவரங்களையும் கறந்திருக்கிறார்.
மேலும் தன்னிடம் பல கோடி கணக்கில் பணம் இருப்பதாகவும் அதனை இந்தியா வரும் போது உனக்காக கொண்டு வருகிறேன் எனவும் அப்பெண்ணிடம் பேசி ஆசையை தூண்டியிருக்கிறார்.
அந்த இளைஞனின் பேச்சை கண்மூடித்தனமாக இளம்பெண்ணும் நம்பி அவரது வருகைக்காக காத்திருந்திருக்கிறார். இதனையடுத்து சில வாரங்களுக்கு முன்பு தான் டெல்லி வந்திருக்கிறேன். 1.50 கோடி ரூபாய் பணம் இருப்பதால் டெல்லியில் விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
அதனை பெறவேண்டுமென்றால் 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கேரள பெண்ணிடம் கேட்டிருக்கிறார். அதை நம்பி அப்பெண்ணும் உடனடியாக பணத்தை அனுப்பியிருக்கிறார்.
மீண்டும் 11 லட்சம் வேண்டும் என அந்த நைஜீரிய இளைஞன் கேட்டதை அடுத்து வங்கிக்கு சென்று பணத்தை அனுப்ப முற்பட்டிருக்கிறார் அப்பெண். ஆனால் சந்தேகமடைந்த வங்கி அதிகாரி போலிஸுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
அதன் பேரில் பெண்ணிடம் விசாரித்ததில் விஷயம் தெரிய வரவே, டெல்லி போலிஸாருக்கு தகவல் பரிமாற்றப்பட்ட அங்கும் விசாரிக்கப்பட்டிருக்கிறது. அப்போதுதான் டெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ள விடுதி அறையில் தங்கியபடியே அந்த நைஜீரிய இளைஞன் கேரள பெண்ணுக்கு வலை விரித்து பணத்தை கறந்திருக்கிறார் என தெரிந்திருக்கிறது.
இதனையடுத்து டெல்லிக்கு விரைந்த கேரள போலிஸார் அந்த நைஜீரிய இளைஞன் தங்கியிருந்த விடுதி அறையை சுற்றி வளைத்திருக்கிறார்கள். அப்போது போலிஸார் வருவதை அறிந்து தப்பியோட முயற்சித்த போது கேரள போலிஸின் பிடியில் சிக்கியிருக்கிறான்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், எனுகா அரின்சி எபெனா குடும்பத்தோடு டெல்லியில் முகாமிட்டு கேரள பெண்ணை போன்று பலரையும் ஏமாற்றி பணம் பறித்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து ஆலப்புழா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நைஜீரிய இளைஞனை சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
Leave a Reply