பழனி முருகன் கோவிலை மேம்படுத்த ரூ.200 கோடி ஒப்புதல் – அமைச்சர் சேகர்பாபு தகவல்..!

திண்டுக்கல்: பழனி முருகன் கோவில் மேம்பாட்டுக்காக ரூ.200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியுள்ளார்.

முன்னதாக வரும் ஜனவரி 27ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவுக்கான பந்தல் கால் நடும் நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் இந்து விரோதப் போக்கை கடைபிடிக்கும் என தேர்தலின் போது சில அமைப்பினர் பிரச்சாரம் செய்த நிலையில், அதனை தவிடுபொடியாக்கும் விதமாக அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

அந்த வகையில் தான் பழனி முருகன் கோவிலை மேம்படுத்த ரூ.200 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் கொடுத்து இந்து சமய அறநிலையத்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் நிரூபித்துள்ளார்.

அண்மையில் திருச்செந்தூர் முருகன் கோவில் மேம்பாட்டுக்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 56 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 13 திருக்கோயில்களில் இராஜகோபுரங்கள், மகா மண்டபம், திருமண மண்டபங்கள், அர்ச்சகர் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு, வணிக வளாகம், மலைப் பாதை சீரமைத்தல், மதிற்சுவர் கட்டுதல், போன்ற 16 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்னர் தொடங்கி வைத்தார்.

பழனி முருகன் குடமுழுக்கு விழா வரும் ஜனவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் சக்கரபாணி, சேகர்பாபு மற்றும் செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர்.