ஆவடி: வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி அருகே திருநின்றவூர், கெங்குரெட்டி குப்பத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மனைவி சர்மிளா (வயது 25). இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 29) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது கார்த்திகேயன், சர்மிளாவுக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய சர்மிளா 2019ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை கொஞ்சம், கொஞ்சமாக ரூ.18 லட்சத்தை தாம்பரம் பகுதியில் வசிக்கும் யமுனா (வயது 26) என்பவரின் வங்கி கணக்கு மூலமாக கார்த்திக்கேயனுக்கு அனுப்பி உள்ளார். இதனைப் பெற்றுக் கொண்ட கார்த்திகேயன், 4 ஆண்டுகள் ஆகியும் சர்மிளாவுக்கு வேலை வாங்கி தராமலும், பணத்தை திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து, சமீபத்தில் சர்மிளா ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் செய்தார். காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் புகாரை திருநின்றவூர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். திருநின்றவூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தலைமறைவாக இருந்த கார்த்திகேயன், யமுனா ஆகிய இருவரையும் நேற்று
கைது செய்தனர்.