கோவையில் விரைவில் அமைகிறது செம்மொழி பூங்கா – அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி..!

கோவை மாநகராட்சி பகுதியில் சாலைகள் அமைக்கும் பணி, கோவை அரசு மருத்துவமனை பகுதியில் பேருந்து நிலையம், ஆர்.எஸ்.புரத்தில் இறகு பந்து மைதானம் என சுமார் ரூ.32 கோடி மதிப்பிலான சாலை பணிகள் மற்றும் பிற திட்டப்பணிகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக கோவை கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள பிரதான சாலை பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட் கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.84 கோடி லட்சம் மதிப்பீட்டில் தார் தளம் புதுப்பித்தல் திட்டத்தை துவக்கி வைத்த பின், மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் :

கோவை மாநகராட்சியில் 13 இடங்களில் ரூ.32.78 கோடி மதிப்பிளான திட்டபணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் புதுபிக்கப்படாத சாலைகள் போடப்பட்டுள்ளது. 100 வார்டுக்களுக்கும் சாலை பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து 193 கோடிக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களிடம் நேரில் பெறப்பட்ட மனுக்களில் ரூ.30 கோடி மதிப்பிலான பணிகள் செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக கோவை மாநகராட்சியில் மட்டும் 2 ஆண்டுகளில் ரூ.223 கோடி ரூபாய் மதிப்பிளான சாலை அமைக்கும் பணிகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது 70% பணிகள் முடிந்துள்ளது. 120 கிலோ மீட்டர் தொலைவிற்கான பணிகளுக்கு முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். குறுகிய காலத்தில் ஒரே நேரத்தில் இவ்வளவு சாலை பணிகள் நடப்பது இதுவே முதல் முறை, இடையர் பாளையம் – தடகம் பணிகள் விரைவில் முடிக்கப்படும். மெட்ரோ பணிகளை துவங்க dpr இறுதி செய்யப்பட்டு விரைவில் பணிகள் துவங்கும், இதுவரை இல்லாத கோவை மாவட்ட வளர்ச்சிக்கான ரூ.9,000 கோடியில் மெட்ரோ , ஐடி பார்க் டெக் சிட்டி, செம்மொழி பூங்கா, எழில் மிகு கோவை திட்டம் என பல்வேறு திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மானிய கோரிக்கையின் போது பல திட்டங்கள் வர உள்ளது என தெரிவித்தார். கோவை மீது அக்கறை கொண்டு முதல்வர் திட்டங்களை வழங்கி வருகிறார். முதல்வர் அறிவித்தது போல 2 நாட்களுக்கு ஒரு முறை குடி நீர் வரும் வகையில் வடிவமைப்புகள் நடந்து வருகிறது. விரைவில் நிதியை பெற்று பணிகள் துவங்கும், செம்மொழி பூங்கா ஒரு பகுதி பணிகள் தற்போது துவங்கும், மத்திய சிறை மாற்றப்பட்ட பிறகு ஏனைய பணிகள் நடைபெறும் என கூறினார்.

உடன், மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணைமேயர் வெற்றிச்செல்வன், மண்டல தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனாலோகு, கதிர்வேல், சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன், திமுக மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.