கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடி மோசடி: கைதான நபரிடம் 2 நாட்கள் கஸ்டடியில் வைத்து விசாரக்க உத்தரவு..!

கோவை பீளமேடு புதூரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 29). இவர் அப்பகுதியில் சக்தி பிளேஸ்மெண்ட் சர்வீஸ் என்ற பெயரில் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்தார். அப்போது அவர் கனடா நாட்டில் வேலை இருப்பதாகவும், விசா, விமான செலவு உள்ளிட்டவற்றுக்கு சில லட்சங்கள் செலவாகும் என அறிவிப்பு வெளியிட்டார். இதனை நம்பி கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த பலர் நிறுவனத்தில் பணம் கட்டினர். 88 பேரிடம் ரூ. 1 கோடி வசூல் செய்தார். அதன் பின்னர் அவர் சொன்னபடி கனடாவில் வேலை வாங்கி தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், பீளமேடு புதூர் முருகன் நகரை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரை கடந்த 17-ந் தேதி கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் அவரை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்த கோவை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி 2 நாட்கள் கஸ்டடியில் விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதனை அடுத்து போலீசார் தமிழ்செல்வனை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் இதே போல் எத்தனை பேரிடம் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் பெற்றுள்ளார்? அவரால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.