சாலையில் சென்றவர்களை ஆக்ரோஷமாக முட்டி தள்ளிய பசுமாடு- 5-க்கும் மேற்பட்டவர்கள் காயம்..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் சமீபகாலமாக கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிந்து வருகிறது.

காலை முதல் இரவு வரை தினசரி மேட்டுப்பாளையம் நகர பகுதியில் சுற்றி திரியும் மாடு- ஆடுகளால் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் தற்போது சாலையில் செல்லும் பொதுமக்களை தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணை மாடு முட்டியதில் அவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலையும் மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலையில் நடந்து சென்றவர்கள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் என அடுத்தடுத்து 5-க்கும் மேற்பட்டோரை பசுமாடு ஒன்று முட்டி தள்ளியது.

இதில் பலர் பலத்த காயம் அடைந்தனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள், மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகளுக்கு, தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சி பணியாளர்கள் அந்த பசுமாட்டினை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பசுமாட்டினை கயிறு போட்டு பிடிக்க முயன்ற போது அந்த பசுமாடு பிடிக்க முயன்றவர்களையும் ஆக்ரோஷமாக தாக்கியது. இதனால் அவர்களுக்கும் சேலசான காயம் ஏற்பட்டது. வெகுநேரம் போராட்டத்திற்கு பின்னர் அந்த பசுமாட்டு பிடிப்பட்டது.

பசுமாடு நடந்து சென்றவரை முட்டி தள்ளும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் தொடர்ந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. அவ்வபோது மாடுகள் தாக்குவதால் சிலர் பலத்த காயம் அடைந்து வருகின்றனர். எனவே கால்நடைகளை சாலைகளில் விடும் அதன் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.