கோவையில் ரூ.1.50 கோடி நிலம் மோசடி- 3 பேர் கைது..!

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். இவருக்கு அன்னூர் பகுதியில் 1.52 ஏக்கர் நிலம் உள்ளது. இவரிடம் அவருடைய நண்பர் வெங்கடேசன் கடந்த 20 20 ஆம் ஆண்டு பணம் கேட்டார். அப்போது அவரிடம் பணம் இல்லாததால் செந்தில்நாதன் தன் நில பத்திரத்தை கொடுத்து அடமான வைத்து பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அந்த பத்திரத்தை வாங்கிய வெங்கடேசன் கலைச்செல்வன் என்பவரிடம் அடமானம் வைத்தார். பின்னர் அந்த பத்திரம் வெங்கடேசனுக்கு தெரியாமல் பல நபர்களுக்கு கை மாறியது. இறுதியாக சென்னையை சேர்ந்த ஜோதி மற்றும் ஜாகிர் உசேன் ஆகியோர் பாலசுப்ரமணியம் என்ற நபரை செந்தில்நாதன் என போலி அடையாள அட்டை தயாரித்து ஆள்மாறாட்டம் செய்துள்ளனர். இதற்காக நந்தகுமார் என்பவரை உடந்தையாக வைத்து ஜெயிச்சந்திரன் என்பவருக்கு ரத்தினசாமி என்பவர் மூலம் விற்பனை செய்துள்ளனர். இதனை அறிந்த செந்தில்நாதன் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனிடம் புகார் மனு கொடுத்தார் . அவரது உத்தரவு பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நில மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர் .இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நந்தகுமார் ( வயது 49) தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் ( வயது 41 )திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரத்தினசாமி (வயது 61 ) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒன்றரை கோடி மதிப்புள்ள நில பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.