கோவையில் விதி மீறி மின் மீட்டர் அகற்றம் – நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்..!

கோவையில் விதி மீறி மின் மீட்டர் அகற்றப்பட்டதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை லாலி சாலை மின் அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி. மாநகராட்சியில் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் ஒரு தற்காலிக மின் இணைப்பு, ஒரு வர்த்தக மின் இணைப்பு என இரு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்தன.

இந்நிலையில், வெள்ளிங்கிரி வீட்டில் இல்லாத நேரத்தில் வர்த்தக மின் இணைப்பைத் துண்டித்து, மீட்டர் பெட்டியை மின் வாரிய அலுவலர்கள் சில மாதங்களுக்கு முன் கழற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, மின் வாரிய அலுவலகத்தில் வெள்ளிங்கிரி கேட்ட போது, அவர்கள் உரிய பதிலளிக்க மறுத்துள்ளனராம்.

மின் மீட்டரைப் பொருத்துமாறு பல முறை கேட்டும், மின் வாரிய அலுவலர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக, மின் வாரிய உயர் அதிகாரிகளிடம், வெள்ளிங்கிரி அளித்த புகாரின் பேரில், சில நாள்கள் முன்பு மீண்டும் வர்த்தக மின் இணைப்பு மீட்டர் பொருத்தப்பட்டது. இருப்பினும், சம்பந்தப்பட்ட மின் வாரிய அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக, கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலர் லோகு சென்னையில் உள்ள மின் வாரியத் தலைவர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், முறையான தகவலின்றி, மீட்டரை அகற்றிய அலுவலர்கள் மீது உரிய விசாரணை நடத்தி, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.