உயிருடன் இருக்கும் மூதாட்டியை சுடுகாட்டில் வீசி சென்ற உறவினர்கள்- நெல்லையில் கண் கலங்க வைக்கும் சம்பவம்..!

நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காட்டில் உயிருடன் இருக்கும் மூதாட்டியை சுடுகாட்டில் உறவினர்கள் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போலீசார் எச்சரித்தும், அவர்கள் மூதாட்டியை ஏற்க மறுத்தனர். நெல்லை மாவட்டம் களக்காடு மூணாற்று பிரிவில் சுடுகாடு உள்ளது. இங்கு நேற்று மூதாட்டி ஒருவர் நீண்ட நேரமாக கட்டிலில் அமர்ந்திருந்தார்.

இதைப்பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், அவரிடம் விசாரித்த போது உறவினர்களே அவரை சுடுகாட்டில் வீசிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் களக்காடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியிடம் விசாரித்தனர்.

அவர், களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்த இசக்கியம்மாள் (80) என்பது தெரிந்தது. அவரது கணவர் ஆறுமுகம் இறந்து விட்டதால், அவரை அவரது மகன் கந்தசாமி பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரும் உயிரிழந்ததால், கந்தசாமியின் இரு மனைவிகளும் மூதாட்டி இசக்கியம்மாளை பராமரித்து வந்துள்ளனர். இசக்கியம்மாளும் அக்கம், பக்கத்தில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். நாளடையில் வயது முதிர்வின் காரணமாக அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. உடல் நலக் குறைவும் ஏற்பட்டதால் அவரை உறவினர்கள் பராமரிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

நேற்று இசக்கியம்மாளை அவரது உறவினர்கள் லோடு ஆட்டோவில் கட்டிலுடன் ஏற்றி சுடுகாட்டில் வீசி விட்டு சென்று விட்டனர். அவர் பயன்படுத்திய சேலைகளையும் மூட்டையாக கட்டி அருகில் போட்டு விட்டு சென்று விட்டனர். அவர் உணவுக்கு வழியின்றி தவித்தார். அந்த வழியாக சென்றவர்கள், அவருக்கு பிஸ்கட் மற்றும் குளிர்பானம் வாங்கிக் கொடுத்தனர். உயிருடன் மூதாட்டியை பராமரிக்க மறுத்து, உறவினர்களே சுடுகாட்டில் வீசிச் விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் லோடு ஆட்டோவில் ஏற மறுத்த மூதாட்டி இசக்கியம்மாளை உறவினர்கள் தாக்கவும் செய்துள்ளனர். இதனால் அவருக்கு தலையில் வலி இருப்பதாகவும் தெரிவித்தார். அதன் பின் போலீசார் மூதாட்டியை ஆட்டோவில் ஏற்றி மீண்டும் அவரது வீட்டிற்கு அழைத்து சென்று உறவினர்களிடம் எச்சரித்து, அவரை ஒப்படைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் மூதாட்டியை ஏற்கவும், பராமரிக்கவும் மறுத்து விட்டனர். இதைப்பார்த்த அந்த தெரு பொதுமக்கள் மூதாட்டியை தாங்கள் பராமரித்து கொள்வதாக ஏற்றுக் கொண்டனர்.