தாயுமானவர் திட்டத்தின் கீழ் சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எந்த தேதிகளில் வீட்டுக்கே சென்று ரேஷன் விநியோகம் செய்யப்பட உள்ளது என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பொங்கல் பரிசுத்தொகை உள்ளிட்ட திட்டங்களும் ரேஷன் கடை வாயிலாகவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நடுத்தர மக்களுக்கு, ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்களே வாழ்வாதாரமாக உள்ளது.
மக்கள் ரேஷன் கடைகளுக்கு நேரடியாக சென்று பொருட்கள் வாங்கி வரும் நிலையில் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவது கடினமாக இருந்து வந்தது. இதனால் கடந்த திமுக அரசு, வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளில் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிதாக ஆட்சிக்கு வ்ந்துள்ள தவெக அரசிலும் இந்த திட்டம் தொடருமா என எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதற்கு ஏற்ப இந்த திட்டம் தொடரும் என தவெக அரசு அறிவித்தது. ‘வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இந்த சேவை தடையின்றி தொடர போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்’ என்று தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் உறுதி அளித்து இருந்தார்.இந்த நிலையில், தாயுமானவர் திட்டத்தில் சென்னையில் ஜுன் 2 (இன்று) மற்றும் ஜூன் 3 (நாளை) ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று சென்னை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
ஜூன் மாதத்தின் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னையில் அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், பல்லாவரம், குரேம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகிய 18 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.







