காவிரி படுகைகளில் நீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா கூறியுள்ளது.
கர்நாடகாவில் ஜூன் மாதத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. இதனால், அணைகளில் நீர்வரத்தும் இல்லை. எனவே தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா திட்டவட்டமாக டெல்லியில் காணொலி வாயிலாக நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்குமுறை கூட்டத்தில் தெரிவித்துள்ளது.
காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சனை நிலவி வருகிறது. காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரினை வழங்க மறுத்து கர்நாடகா அடம் பிடித்து வருகிறது. மழை நன்றாக பெய்தால் உபரி நீரை திறந்து விடும் கர்நாடகா, வறட்சி காலத்தில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை கூட தருவதில்ல்லை. இதனால், இரு மாநிலங்களுக்கும் இடையே காவிரி நதி நீர் பிரச்சனை நீண்டகாலமாக நிலவுகிறது. நடப்பு ஆண்டு எல் நினோ தாக்கம் காரணமாக கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகள் நிரம்பவில்லை. கர்நாடகா வறட்சியை நோக்கி செல்ல இருப்பதாக கூறி தண்ணீரை திறக்க மறுத்து வருகிறது. இதற்கிடையே, டெல்லியில் காவிரி நீர் ஒழுங்குமுறை கூட்டம் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கான காவிரி நீர் திறக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது. இதையடுத்து பேசிய கர்நாடக அதிகாரிகள், “கர்நாடகாவில் ஜூன் மாதத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை.இதனால், அணைகளில் நீர்வரத்தும் இல்லை. ஜூலை மாதத்தில் சில இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. இதனால், அணையில் குறைந்த அளவிலேயே தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. பருவமழை தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் இன்னும் தென்படவில்லை. அணைகளிலும் போதிய நீர் இருப்பு இல்லை. இதுவரை காணாத மழைப்பற்றாக்குறையை கர்நாடகா சந்தித்து வருகிறது.
காவிரி படுகைகளிலும் நீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், தமிழகத்திற்கு நீர் திறந்துவிட முடியாது” என்று தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்துள்ள நிலையில், காவிரியில் நீர் திறக்க முடியாது என்று கர்நாடகா கை விரித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியதாவது:- “காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டத்தில் காவிரி அணை நீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு கோரிக்கை வைத்தது. நமது மாநிலத்தில் நீர் இருப்பு நிலையை அதிகாரிகள் எடுத்து வைத்தனர். தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கும்படி அந்தக் குழு உத்தரவிடவில்லை” என்றார்.





