ராமர் கோவில் விவகாரம்… இந்திய முஸ்லீம்களை தூண்டிவிடும் பாகிஸ்தான்- தக்க பதிலடி கொடுத்த இந்தியா.!!

டெல்லி: அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால், இந்திய முஸ்லீம்களை தூண்டிவிட அந்த நாடு முயற்சிக்கிறது என்று இந்திய அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, ராமர் கோவில் கட்டுமான பணிகளை, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கட்டுமான பணிகள் ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை மேற்பார்வையில் நடந்து வந்தது.

உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் அளித்த நன்கொடை மூலம் கோவில் கட்டுமான பணிகள் நடந்தது. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும் வகையில் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்றன. இரும்பு பொருட்கள் எதுவும் இன்றி வெறும் கற்களை கொண்டே இந்த கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டது. புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலில் 5 வயது பால ராமர் சிலை என்பது கடந்த 18 ம் தேதி நிறுவப்பட்டது.

இதையடுத்து இன்று கோவிலில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் 12.15 மணிக்கு தொடங்கிய பிரான் பிரதிஷ்டை சடங்குகள் 12.45 மணி வரை நடந்தது. பிரதமர் முன்னின்று ராமர் சிலை பிரதிஷ்டை செய்தார். ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பாலராமர் சிலை முன்பாக கண்களை மூடி மனமுருகி பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

இதன் பின்னர் ராமர் சிலைக்கு தீப ஆராதனையும் காட்டினார். ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவின் பெரும்பான்மைவாதத்தை காட்டுவதாக கூறியுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், “இந்தியாவில் அரசியல், பொருளாதார ரீதியாக முஸ்லீம்கள் ஓரங்கட்டப்படுவதற்கான முயற்சிகளின் முகமாக இது அமைந்துள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் இந்துத்வா சித்தாந்தம் மத நல்லிணகத்திற்கும் பிராந்திய அமைதிக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. முஸ்லீம்கள் உள்பட சிறுபான்மை மக்களையும் அவர்களின் வழிபாட்டு தலங்களின் பாதுகாப்பையும் இந்தியா உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.