சென்னையில் பல இடங்களில் 2ஆவது நாளாக தொடரும் ரெய்டு.!!

சென்னை: மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் சென்னை கிளை உட்பட பல இடங்களில் நேற்று தொடங்கிய ரெய்டு இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே பல இடங்களில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை சோதனை என்பது தொடர்ந்து வருகிறது. லோக்சபா தேர்தலும் கூட நெருங்கி வரும் நிலையில், சோதனை மேலும் அதிகரிக்கும் என்றே சொல்லப்படுகிறது.

இதற்கிடையே நேற்றைய தினம் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையை நடத்தினர். மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனமான இன்டர்நேஷனல் டிரேடு லிங்க்ஸ் என்ற நிறுவனத்தின் சென்னை கிளைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் டெல்லி, ஆந்திரா, தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருக்கும் நிலையில், இப்போது சென்னையில் ரெய்டு நடந்து வருகிறது. சென்னை எழும்பூரில் உள்ள அந்த குறிப்பிட்ட மும்பை நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் தீவிர சோதனை நடந்து வருகிறது. அது மட்டுமின்றி புறநகரில் உள்ள மற்ற இடங்களிலும் ரெய்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

பெரு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஆட்கள் தேவைப்படும் போது அதை நிரப்ப உதவுவது, வெளிநாடுகளுக்கு வேலைக்காக ஆட்களை அனுப்புவது, திட்ட அறிக்கைகள் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகப் புகார் எழுந்த நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

நேற்றைய தினம் சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். மும்பை நிறுவனத்தின் கிளை அலுவலகத்துடன் சேர்ந்து குறிப்பிட்ட அந்த நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கும் மற்ற நிறுவனங்களின் இடங்களிலும் ரெய்டு நடந்தது. அதிகாலை தொடங்கிய ரெய்டு பல மணி நேரம் நடந்து நள்ளிரவை வரை நடந்தது. அப்போதும் கூட ரெய்டு முடியவில்லை.

இதற்கிடையே இன்று இரண்டாவது நாளாக அங்கே ரெய்டு தொடர்ந்து வருகிறது. இதில் சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை. சோதனை முழுமையாக முடிந்த பிறகே ரெய்டு தகவல்கள் தெரிய வரும்.