ராகுல் மேல்முறையீட்டு மனு எதிர்தரப்பினருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்- ஆக.4ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அமர்வு, எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது..

2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நாட்டை விட்டு தப்பி ஓடுகிற மோசடி பேர்வழிகள் மோடி என்ற பெயர் கொண்டவர்களாகவே இருக்கின்றனர் என்றார். இது மோடி சமூகத்தை இழிவுபடுத்துவதாக கூறி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் ராகுல் காந்தி எம்பி பதவி உடனடியாக பறிக்கப்பட்டது. டெல்லியில் ராகுல் காந்திக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவும் திரும்பப் பெறப்பட்டது. பின்னர் ஏப்ரல் 3-ந் தேதி சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரி ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். ராகுல் காந்தியின் இந்த மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பின்னர் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மற்றொரு மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது நடந்த விசாரணையில், ராகுல் காந்தி வென்ற வயநாடு தொகுதிக்கு 3 மாதங்களில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்கக் கூடும். அதை ராகுல் காந்தியால் தடுத்து நிறுத்த முடியாது என்பதால் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. ஆனால் குஜராத் உயர்நீதிமன்றம், ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன் கீழ் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சரிதான் எனவும் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, ராகுல் காந்தி இறுதி வாய்ப்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்கு முன்னதாகவே அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பாஜக எம்.எல்.ஏ புருனேஷ் மோடி, உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பி.ஆர். கவாய், தனது தந்தை மற்றும் சகோதரர் காங்கிரசுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். எனவே இந்த வழக்கை தாம் விசாரிக்கலாமா ?அதில் எந்த தரப்பினருக்காவது ஆட்சேபனை இருந்தால் தான் விசாரிக்க போவதில்லை என கூறினார். அதற்கு ஆட்சேபனை இல்லை என ராகுல்காந்தி தரப்பு மூத்த வழக்கறிஞர் சிங்வி மற்றும் எதிர் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி தெரிவித்தனர்.

இதன்பின்னர், ராகுல் காந்தி தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதில், ராகுல் காந்தி அரசியல்ரீதியாக பேசியதை மனுதாரர் தவறுதலாக புரிந்து கொண்டு தங்களைப் பேசியதாக வழக்கு தொடர்ந்தது அடிப்படையிலேயே தவறானது. ராகுல் காந்தி எந்த ஒரு சமூகத்துக்கு எதிராகவும் பேசவில்லை. அவரது பேச்சு முழுமையாக அரசியல் அடிப்படையிலானது. ஒரு மக்கள் பிரதிநிதிக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் தம்மை தேர்ந்தெடுத்த மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மோடி என்பது ஒரு சமூகத்தின் பெயர் மட்டுமல்ல.. பல்வேறு சமூகங்கள், சமூகங்களின் உட்பிரிவுகளிலும் கூட இருக்கிறது. மோடி என்ற பெயரை தனிப்பட்ட நலன்களுக்காக ராகுல் காந்தி விமர்சிக்கவும் இல்லை. மனுதாரர் மோத் வணிக சமாஜ் என்ற அமைப்பைச் சேர்ந்தவராக குறிப்பிட்டுள்ளார். அவருக்கும் மோடி பெயருக்கும் என்ன தொடர்பு? அத்துடன் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்காவிட்டால் ராகுல் காந்தியின் 8 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. எனவே ராகுல்காந்தியின் தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால், அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், எதிர் தரப்பையும் தாங்கள் கேட்க வேண்டி இருப்பதாகவும் அதன் பின்னரே உத்தரவு பிறப்பிக்க முடியும் என கூறி, எதிர்மனுதாரர்களான குஜராத் அரசு மற்றும் புர்னேஷ் ஈஸ்வர்பாய் மோடி ஆகியோர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்..