பருத்தி துணி கழிவில் இருந்து காகிதம் தயாரிப்பு- பிரதமர் மோடி பாராட்டு..!

திருப்பூர்: திருப்பூர் ‘நிப்ட்-டீ’ அடல் இன்குபேஷன்’ மைய வழிகாட்டுதலுடன், பருத்தி துணி கழிவில் இருந்து காகிதம் தயாரிக்கும் முயற்சியை, பிரதமர் நரேந்திர மோடி வெகுவாக பாராட்டியுள்ளார். திருப்பூர் ‘நிப்ட்-டீ’ ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், ‘அடல் இன்குபேஷன்’ மையம், 2017 முதல் செயல்படுகிறது.
மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’, ‘அடல் இன்னோவேஷன் மிஷன்’ உதவியுடன், இயங்கி வரும் மையத்தில், புத்தாக்க நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனை; புதிய கண்டுபிடிப்புகளை சந்தைப்படுத்த உதவி அளிக்கப்படுகிறது.கடந்த, நான்காண்டில் ‘நிப்ட்-டீ’ அடல் இன்குபேஷன் மையத்தில், 67 புதிய ஸ்டார்ட் -அப்’ நிறுவனங்கள், தங்கள் புதிய படைப்புகளை சமர்ப்பித்துள்ளனர். இந்தியாவின்,’பொக்ரான்’ அணு ஆயுத சோதனை நடந்த நாளை நினைவு கூரும் வகையில், தேசிய தொழில்நுட்ப வாரம்கொண்டாடப்பட்டது. ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்கள், தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.புதுடில்லியில், கடந்த 11ம் தேதி நடந்த இந்நிகழ்ச்சியை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார். புதிய கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு, புதிய தொழில்நுட்பத்தை கேட்டறிந்து, தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தினார்.திருப்பூருக்கு பாராட்டுதிருப்பூர் ‘நிப்ட்-டீ’ அடல் இன்குபேஷன் மையத்தின் சார்பில், முதன்மை ஆலோசகர் ராஜா சண்முகம், மைய தலைவர் மோகன் ஆகியோர் பங்கேற்று, ‘ஸ்டார்ட் -அப்’ நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்பு குறித்து, பிரதமருக்கு விளக்கினர்.’ஸ்டார்ட் -அப்’ நிறுவனத்தின், பருத்தி துணி கழிவில் இருந்து மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட காகிதத்தில், இயற்கை சாயத்தில் அச்சிடப்பட்ட, பிரதமரின் சிறுவயது போட்டோவை பரிசாக வழங்கினர்.

‘நிப்ட்-டீ ஆராய்ச்சி மற்றும் இன்குபேஷன் மைய தலைவர் செந்தில்குமார், மேலாளர் செந்தில்குமார், தொழில்நுட்ப பிரிவு அலுவலர் அருள்செல்வன், ‘புனர்பவா ஸ்டார்ட் -அப்’ நிறுவன இயக்குனர் சக்திவேல் பங்கேற்றனர்.மரம் வெட்டுவது குறையும்’நிப்ட்-டீ’ அடல் இன்குபேஷன் மைய முதன்மை ஆலோசகர் ராஜா சண்முகம் கூறியதாவது:”நிப்ட்-டீ’ அடல் இன்குபேஷன்’ மையத்தின் வழிகாட்டுதலுடன், கரூரை சேர்ந்த நிறுவனம் ஒன்று, பருத்தி துணி கழிவில் இருந்து, காகிதம் தயாரிக்கிறது. டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், ‘ஸ்டார்ட் -அப்’ நிறுவனத்தின், புதிய முயற்சி குறித்து கேட்டறிந்த பிரதமர் மிகவும் பாராட்டினார். மறுசுழற்சி தொழில்நுட்பத்தால், மரம் வெட்டுவது குறையும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றும் பாராட்டினார். ஆர்வத்துடன் தனது சிறுவயது போட்டோவை பார்த்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.இவ்வாறு, அவர் கூறினார்.