கோவை ரயில் நிலையத்தில் பரபரப்பு. கேரளா போலீசாரிடம் இருந்து கைதி தப்பி ஓட்டம்
கோவை ரயில் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்த கேரளா போலீசாரிடம் இருந்து கைதிதப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த அனீஸ் பாபு என்பவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது. அவரை கேரளா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இந்நிலையில், பாலக்காட்டில் இருந்து நேற்று முன் தினம் வழக்கு விசாரணைக்காக, அனிஸ் பாபுவை, திருப்பத்தூர் அழைத்து வந்தனர்.
விசாரணை முடிந்து, மீண்டும் திருப்பத்தூர் இருந்து வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயிலில் திரும்பிய போது, அவர்கள் வந்த ரயில் கோவை ரயில் நிலையத்திற்கு வந்தது, அப்போது, அனீஸ் பாபு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினார். இதையடுத்து, கோவை ரயில்வே காவல் நிலையத்தில் கேரள போலீசார் புகார் அளித்தனர்.
தப்பி ஓடிய அனீஸ் பாபு மீது தமிழகம், கேரளா மாநிலங்களில் செயின் பறிப்பு, உள்ளிட்ட பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.