புதுடெல்லி: பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் சீன நிறுவனங்களை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் சீன நிறுவனங்கள் பெரிய அளவில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து சீன செல்போன் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அடுத்தடுத்து கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில், தற்போது பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் இந்நிறுவனங்களை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் வர்த்தக வார இதழான புளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதாவது, ₹12,000க்கு குறைவான ஸ்மார்ட்போன்களை இனி சீன நிறுவனங்கள் தயாரிக்கக் கூடாது என கட்டுப்பாடு கொண்டு வரப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பலன் அடையும் என ஒன்றிய அரசு நம்புவதாக கூறப்படுகிறது. கவுண்டர்பாயிண்ட் நிறுவன ஆய்வறிக்கையின்படி, கடந்த காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்கிற்கு ₹12,000 ஸ்மார்ட்போன்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 80% சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் தயாரிப்புகளாகும். இந்த நடவடிக்கையால், போட்டியின்மை காரணமாக பயனாளர்கள் அதிக விலை கொடுத்து பட்ஜெட் ஸ்மார்ட்போனை வாங்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply