பிரதமர் மோடி போட்டியிட வேண்டிய தொகுதியை எனக்காக கொடுத்திருக்கிறார் – ஓபிஎஸ் பிரச்சாரம்.!!

தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் மற்றவர்களின் குறைகள், நிறைகளைப் பட்டியலிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். சுவாரஸ்யமாக இத்தொகுதியில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக அவரது பெயரிலேயே ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரத்தில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஓ. பன்னீர்செல்வம், ‘தற்போது கச்சத்தீவு பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. சுதந்திரத்திற்கு முன்பு கச்சீத்தீவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதிக்கு சொந்தமானதாக இருந்தது. இது தொடர்பான தகவல் தாமிர பட்டயத்தில் உள்ளன. 1974-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசும், தி.மு.க. அரசும் இணைந்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தார்கள். அதற்கு முன்பு கச்சத்தீவை தாண்டி 2 மைல் தொலைவிற்கு சென்று நமது மீனவர்கள் மீன்பிடித்து வந்தார்கள். ஆனால் தாரைவார்க்கப்பட்ட பின்பு கச்சத்தீவில் இருந்து 2 நாட்டிக்கல் முன்பே மீனவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். அதனை மீறி செல்பவர்களை இலங்கை கடற்படை கைது செய்தும், விரட்டியடித்தும் வருகிறது. தற்போது பிரதமர் கச்சத்தீவு பிரச்சினையை கையில் எடுத்துள்ளார். அவருடன் இணைந்து கச்சத்தீவை மீட்டு இந்த மாவட்ட மக்களுக்கு கொடுப்பேன்.

பாரத பிரதமராக மூன்றாம் முறையாக பதவியேற்க இருக்கின்ற நரேந்திர மோடி இன்று எனக்கு ஆதரவாக இருக்கிறார். அந்த கூட்டணியில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. எதுவுமே இல்லாத நிராயுதபாணியாக அதிமுக தொண்டகளின் உரிமையை பாதுகாக்கும் குழுவாக செயல்பட்டு கொண்டிருக்கிற என்னை இன்று பிரதமர் மோடி ஆதரித்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கமாக இணைத்துக் கொண்டுள்ளார். அவர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வேட்பாளராக நிற்க வேண்டிய இந்த ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியை எனக்காக தந்திருக்கிறார் என்று ஓ.பி.எஸ் பேசினார்.