புகையிலைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கை.. தமிழகத்திலேயே முதலிடம் பிடித்து மாஸ் காட்டிய கோவை மாவட்டம் – சுகாதாரத் துறை

கோவை:
தமிழகத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருந்தும் சில பகுதிகளில் புகையிலைப் பயன்பாடு இருந்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட புகையிலைத் தடுப்புப் பிரிவின்கீழ் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பறிமுதல், அபராதம் விதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 713 பேரிடம் இருந்து ரூ.1.34 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புகையிலைப் பயன்பாடு தடுப்பு நடவடிக்கைகள், அபராதம் விதித்தல் ஆகியவற்றில் தமிழக அளவில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாவட்ட சுகாதார ஆய்வாளர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆகியோர் ஊரகப் பகுதிகளில் புகையிலைப் பயன்பாடு தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தடையை மீறி புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்பவர்கள் மீது புகையிலைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.