நமது பண்பாடு, கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும்- கோவை கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி பேச்சு..

கோவை எட்டிமடையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில் ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்துகொண்டு பேசியதாவது: பிரதமர் மோடியின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நாட்டில் இருந்த பல்வேறு பிரச்னைகள் சரி செய்யப்பட்டுள்ளதால் நாடு பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சி அடைந்து வருகிறது. மொழி, இடம், கலாசாரம் போன்ற பல்வேறு வேறுபாடுகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ளதால், நாட்டின் வளா்ச்சி தடைபட்டு வந்தது. ஆனால், இப்போது இந்தியா ஒரே நாடு என்று உணரப்பட்டு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
மக்கள் அனைவருக்கும் கல்வி, சுகாதார வசதிகள், இருப்பிடம், குடிநீர், உணவு போன்றவை கிடைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது.
முன்பெல்லாம் அரசு மட்டுமே வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொண்டது. இப்போது அனைவரும் ஒருங்கிணைந்து வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் விதமாக மாறி வருகிறது.
நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கடந்த 8 ஆண்டுகளில் ஏராளமான புதிய தொழில்முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர். விண்வெளி ஆராய்ச்சியில் மாணவர்கள் சாதனை புரிந்து வருகின்றனர். உலக நாடுகள் பல்வேறு விஷயங்களில் இந்தியாவை எதிர்நோக்கியுள்ளன. 100வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவாகியிருக்கும். இன்றைய இளைஞர்கள் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்குவதுடன் நமது பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றையும் பாதுகாத்து பெருமை கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக பல்வேறு துறைகளில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளை முடித்த 588 மாணவிகள் உள்ளிட்ட 1,808 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற 77 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், கல்வி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நடராஜர் சிலையை ஆளுநர் திறந்து வைத்தாா்.