கோவையில் கலவரம் ஏற்படாமல் தடுக்க 25 ஆண்டுக்கான வரைபடத் தடுப்பு திட்டம் தயாரிப்பு- போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவிப்பு..!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை நகரில் வகுப்புவாத சக்திகளை கண்காணிக்க சமூக ஊடகங்களில் வலுவான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மத நல்லிணக்கத்தை உருவாக்க மதங்களுக்கிடையான கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. உளவியல் ரீதியாகவும், குடும்ப உறுப்பினர்கள் சமூகத் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார் தடியடி நடத்துவதற்கு பதிலாக அன்பையும் ,அக்கறையும் செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள் .இனி இது போன்ற பயங்கரவாத சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கோவையில் வரும் 25 ஆண்டுக்கான வரைபடத் திட்டத்தை தயாரித்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தபட்டு வருகிறது. இது தவிர கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் பெருகிவரும் போதை பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. கல்லூரி மாணவிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கோவை மாநகர காவல் துறை சார்பில் “போலீஸ் அக்கா” திட்டம் செயல்படுத்தப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது .இவ்வாறு அவர் கூறினார்.