பொங்கல் பரிசு தமிழகஅரசு திட்டம்….

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெறும் வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம், ரொக்கம் வழங்கும் திட்டம் ஆகியவை செயல்பாட்டில் உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு 21 பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால், ரொக்கம் கொடுக்கவில்லை. பல இடங்களில் பொருள்கள் தரமற்றவையாக இருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் நடப்பாண்டில் (2023ஆம் ஆண்டு) பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அந்தவகையில், நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பரிசுத்தொகை எவ்வளவு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பொங்கல் பரிசு கொள்முதல் நடைமுறை இன்னும் தொடங்கப்படாத நிலையில், 1000 ரூபாய் ரொக்கத்துடன் சேர்த்து பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாகவும் பணம் வழங்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதாவது, ரூ.2000 வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

அதேபோல், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் 14 அல்லது 15 தேதிக்குள் விடுவிக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை 15ஆம் தேதி வருவதால் அதனை சிறப்பாக கொண்டாடும் விதமாக 14ஆம் தேதிக்கு முன்னதாகவே மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படியானால், ரூ.3000 கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், மகளிர் உரிமைத் தொகை அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படவில்லை. எனவே, மகளிர் உரிமைத் தொகை பெறாத குடும்பங்களுக்கு ரூ.2000 ரொக்கமும், அத்தொகையை பெறும் குடும்பங்களுக்கு ரூ.3000 ரொக்கமும் கிடைக்கும் என எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. அதேசமயம், மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களில் கனமழை என தமிழகம் இரண்டு பேரிடர்களை எதிர்கொண்டுள்ளது. இதனால், ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்திட தமிழக அரசிடம் போதுமான நிதி இல்லை என்பதால், நிதி பற்றாக்குறை காரணமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கம் ஆகியவை வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கம், பரிசுத்தொகுப்பும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனவும், அடுத்த சில தினங்களில் பரிசு தொகைக்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகள் தொடங்கப்படும் எனவும் தெரிகிறது.