புழல் மத்திய சிறை மற்றும் தேனி சிறைகளில் கைதிகள் தப்பி ஓடிய விவகாரத்தை தொடர்ந்து சிறைத்துறை டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றப்பட்டு சிறைத்துறைக்கு புதிய கூடுதல் டிஜிபியாக சங்கரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து இரண்டு தண்டனை கைதிகள் கடந்த வாரம் தப்பினர். அவர்களை கடும் போராட்டத்திற்கு பிறகு போலீசார் கைது செய்தனர். அதேபோல், தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் ஒரே நேரத்தில் காவலர்களை தாக்கிவிட்டு சிறையின் நுழைவாயில் வழியாக தப்பி சென்றனர். அவர்களையும் போலீசார் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு கைது செய்தனர்.
சிறைச்சாலைகளில் கைதிகள் அடுத்தடுத்து தப்பி ஓடிய சம்பவம் நடந்ததால் தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகள் உள்பட மொத்தம் 142 சிறைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு அமைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறைச்சாலைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையின் டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை நேற்று அதிரடியாக தமிழக அரசு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் கார்த்திக் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் தலைமை இயக்குநராக இருந்த டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மின்வாரிய விஜிலென்ஸ் அதிகாரியாகவும், அமலாக்கப்பிரிவு சிஐடி கூடுதல் டிஜிபியாக இருந்த சங்கர் சிறைச்சாலை மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஜிபி சஞ்சய் மாத்தூர் மாநில குற்ற ஆவண காப்பக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு ஐஜி நிலையில் இருந்த இந்த பிரிவு தற்போது டிஜிபி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
மாநில குற்ற ஆவண காப்பக ஐஜியாக இருந்த சோனல் சந்திரா காவல்துறை தலைமையிட ஐஜியாகவும், தாம்பரம் மாநகர பள்ளிக்கரணை துணை கமிஷனராக இருந்த ரகுபதி கரூர் மாவட்ட எஸ்பியாகவும், பொருளாதார குற்றப்பிரிவு வடக்கு மண்டல எஸ்பியாக இருந்த ஸ்டாலின் தென்காசி மாவட்ட எஸ்பியாகவும், தென்காசி மாவட்ட எஸ்பியாக இருந்த அசோக்குமார் மதுரை பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது.








